பாரதத்தை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும்

நேபாள நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கோபால் பரஞ்சலி, பாரதத்தை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும். பாரதம் ஹிந்து நாடாக மாறினால், அது முழு உலகத்திலும் சாதகமான சூழலை கொண்டு வரும் என கூறியுள்ளார். பரஞ்சலி, நேபாளத்தின் தூதுக்குழுவுடன் மதுராவின் கோவர்தனில் உள்ள கோயில்களுக்குச் சென்றார். பசுபதிநாத் விகாஸ் கோஷ் காத்மாண்டுவின் முக்கிய உறுப்பினர் அர்ஜுன் பிரசாத் வஸ்தோலா உள்ளிட்ட பத்து பேர் இந்த தூதுக்குழுவில் அங்கம் வகித்தனர். அவர்கள் கோயில்களுக்குச் சென்றதைத் தொடர்ந்து, ஸ்ரீ ஆத்ய சங்கராச்சாரியார் ஆசிரமத்திற்குச் சென்று கோவர்தன்புரியின் பீடாதீஷ்வர் சுவாமி அதோக்ஷஜனந்த் தேவ்த்ரிதாவிடம் ஆசி பெற்றனர்.

அப்போது பாரத நேபாள உறவுகள் குறித்த விவாதத்தின் போது பேசிய கோபால் பரஞ்சலி, “நேபாளம் ஏற்கனவே கொள்கையளவில் ஒரு ஹிந்து நாடு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரதமும் ஹிந்து நாடாக மாறினால் அது முழு உலகத்தையும் சாதகமாக பாதிக்கும். உலகெங்கிலும் உள்ள 178 கோடி ஹிந்துக்களை இது பெருமைப்படுத்தும். அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்” என்று கூறினார்.

தூதுக்குழுவில் அங்கம் வகித்த அர்ஜுன் பிரசாத் வஸ்தோலா கூறுகையில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கராச்சாரியார், மதவெறியர்களால் அழிக்கப்பட்ட வேத சனாதன கலாச்சாரத்தை மீண்டும் நிறுவினார். இப்போது மீண்டும், சங்கராச்சாரியாரின் எண்ணங்களால் அனைவரும் பயனடைவார்கள். கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் என தனி நாடுகள் உள்ளன, யூதர்களுக்கு தனக்கென்று கூட ஒரு நாடு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான பாரதத்தை ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும். பாரதம் ஒரு தெய்வீக நாடு. ஞான ஓட்டம் எப்போதும் இங்கு பாய்கிறது. பாரதத்தை ஹிந்து நாடாக அறிவிப்பது உலகளவில் உள்ள சனாதனிகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், மேலும் அது உலக முன்னேற்றத்திற்காகவும் அமையும்” என்றார்.

2006ம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகு 2008ல் நேபாளம் ஒரு ‘மதச்சார்பற்ற’ நாடாக அறிவிக்கப்பட்டது. இது முடியாட்சியை ஒழிக்க வழிவகுத்தது. நேபாளத்தில் ஹிந்து மதம் மிகப்பெரிய மதம் எனவே, நேபாளத்தை மீண்டும் ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. பிப்ரவரி 2023ல், நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷா, நாட்டை மீண்டும் ஹிந்து ராச்சியமாக நிலைநிறுத்துவதற்கான பிரச்சாரத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.