தேர்தல் ஆதாயத்துக்காக, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி. கிருஷ்ணய்யர் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பீகார் முன்னாள் எம்.பி.யும், கேங்க்ஸ்டருமான ஆனந்த் மோகனை முன்கூட்டியே விடுவிக்கும் வகையில், பீகார் அரசு, சிறைச் சட்டத்தில் திருத்தம் செய்தது. மாநில சட்டத் துறை எந்த விளக்கமும் அளிக்காமல் இந்த திருத்தத்தை அவசரமாக அமல்படுத்தியது. இதையடுத்து, ஏப்ரல் 27 அன்று, ஆனந்த் மோகன் சஹர்சா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து கிருஷ்ணய்யரின் மனைவியான உமா கிருஷ்ணய்யர் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், “மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் போது, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் அது மன்னிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மே 8ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.