ஞாயிற்றுக்கிழமை வெளியான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 100வது மனதின் குரல் உலகெங்கும் பலத்த வரவேற்பை பெற்றது. இது ஐ.நா சபை உட்பட பல இடங்களில் ஒலிபரப்பானது. வெளிநாடு வாழ் பாரத சமூகத்தினரும் பல்வேறு நாடுகளில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சி, 22 பாரத மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்பட்டதுடன் தனியார் பண்பலை உட்பட 1,000 வானொலி நிலையங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் இவை ஒலிபரப்பு செய்யப்பட்டது. நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதைத்தவிர, வெளி நாடுகளில் உள்ள பாரதத் தூதரகங்கள், அனைத்து மாநிலங்களின் ஆளுநர் மாளிகைகள், பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல்வர்களின் வீடுகளில் மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. 100வது மனதின் குரல் நிகழ்ச்சியை ஒட்டி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், பத்ம விருது பெற்றவர்கள், அமீர் கான், மாதுரி தீட்சித், ஷாஹித் கபூர், ரோஹித் ஷெட்டி போன்ற முக்கிய நடிகர்கள், பிரபலங்கள், பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சாமானியர்கள் என பலர் பங்கேற்றனர். மேலும், இர்பானி மதரசா, லக்னோ, ஜமா மஸ்ஜித் போன்ற பல மத வழிபாட்டுத் தலங்களிலும் பரவலாக ஒலிபரப்பானது. ஒரு ஆய்வில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள், பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சியை ஒரு முறையாவது கேட்டுள்ளனர், இது மக்களிடம் நேரடியாகப் பேசுகிறது, அடிமட்ட அளவிலான மாற்றங்களை உருவாக்குபவர்கள் மற்றும் மக்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது மற்றும் நேர்மறையான செயல்களை நோக்கி மக்களை திருப்புகிறது” என தெரியவந்துள்ளது. அவ்வகையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது எபிசோடின் ஒளிபரப்பு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் பில்லியன் கணக்கான பதிவுகள் கொண்ட சுமார் ஒன்பது லட்சம் டுவீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 11 லட்சத்துக்கும் அதிகமானோர், மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.