எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலுடைய 100ஆவது பகுதி. உங்களுடைய ஆயிரக்கணக்கான கடிதங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன, லட்சோபலட்சம் செய்திகள் வந்திருக்கின்றன, முடிந்த மட்டிலும் அதிகபட்ச கடிதங்களைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், செய்திகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். உங்களுடைய கடிதங்களைப் படிக்கும் வேளைகளில் பல சமயம் நான் உணர்ச்சிவசப்பட்டேன், உணர்வுகளில் அமிழ்ந்து போனேன், உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டேன், அடித்துச் செல்லப்பட்டேன், ஆனால் ஒருவழியாக, என்னையே நான் நிதானித்தும் கொண்டேன். நீங்கள் மனதின் குரலுடைய 100வது பகுதிக்காக பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால், உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறேன், பாராட்டுக்களுக்கு மொத்தச் சொந்தக்காரர்கள், மனதின் குரலின் நேயர்களான நீங்களும், நம்முடைய நாட்டு மக்களும் மட்டுமே. மனதின் குரல்….. கோடானுகோடி பாரத நாட்டவர்களுடைய மனங்களின் குரல், அவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு.
ஒவ்வொரு பகுதியுமே விசேஷம்: நண்பர்களே, 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி, விஜயதசமி நன்னாள்…. அன்று இந்தப் புனிதத் திருநாளன்று நாமனைவரும் இணைந்து மனதின் குரல் யாத்திரையைத் தொடக்கினோம். விஜயதசமி அதாவது தீமைகளின் மீது நல்லவைகளின் வெற்றித் திருநாள். மனதின் குரலும் கூட, நாட்டு மக்களின் நல்லவைகளின், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின், அற்புதமான திருநாளாகும். இந்த நன்னாள் ஒவ்வொரு மாதமும் வருகிறது, இதற்காக நாமனைவரும் காத்திருக்கிறோம். நாம் இதிலே நேர்மறைத்தன்மையைக் கொண்டாடுகிறோம். நாம் இதிலே மக்களின் பங்களிப்பையும் கொண்டாடுகிறோம். பல வேளைகளில், மனதின் குரல் தொடங்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகிவிட்டன, இத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பதை நம்பக் கூட முடியவில்லை. இதன் ஒவ்வொரு பகுதியுமே விசேஷமானதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும், புதிய எடுத்துக்காட்டுகளின் நவீனம், ஒவ்வொரு முறையும் நாட்டுமக்களின் புதிய வெற்றிகளின் வீச்சு. மனதின் குரலில் ஒட்டுமொத்த நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள், அனைத்து வயதுக்காரர்கள், பிரிவினர்களும் இணைந்தார்கள். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம் ஆகட்டும், தூய்மை பாரதம் இயக்கம் ஆகட்டும், கதராடைகளின் மீதான அன்பாகட்டும், இயற்கை பற்றிய விஷயமாகட்டும், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவாகட்டும், அமுத நீர்நிலைகளாகட்டும், மனதின் குரலானது எந்த விஷயத்தோடு இணைந்ததோ, அது மக்கள் இயக்கமாக மாறியது, இதை நீங்கள் தான் அப்படி ஆக்கினீர்கள். அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஓபாமா அவர்களோடு மனதின் குரலில் பங்கெடுத்தபோது, இது உலகெங்கிலும் ஒரு விவாதப் பொருளானது.
லக்ஷ்மண்ராவ் ஜி இனாம்தார்: மனதின் குரல் என்னைப் பொறுத்த மட்டில், மற்றவர்களின் குணங்களைப் போற்றுவதைப் போன்றது. என்னுடைய வழிகாட்டி ஒருவர் இருந்தார், அவர் லக்ஷ்மண்ராவ் ஜி இனாம்தார். நாங்கள் அவரை வக்கீல் ஐயா என்று தான் அழைப்போம். அவர் எப்போதும் ஒரு விஷயத்தைக் கூறுவார் ‘நாம் எப்போதும் மற்றவர்களின் குணநலன்களைப் பாராட்ட வேண்டும், எதிரில் இருப்பவர் உங்களுடைய நண்பராக இருந்தாலும் சரி, உங்களுடைய எதிரியாக இருந்தாலும் சரி, நாம் அவரவருடைய நல்ல இயல்புகளை அறிந்து கொண்டு, அவர்களிடமிருந்து கற்க முயல வேண்டும்’ என்பார். அவருடைய இந்தக் கூற்று எனக்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது. மனதின் குரல், மற்றவர்களின் குணங்களிடமிருந்து கற்க ஒரு மிகப் பெரிய சாதனமாக ஆகி விட்டது.
மனதின் குரல் எனது ஆன்மீகப் பயணம்: இந்த நிகழ்ச்சியானது, உங்களிடமிருந்து என்னை எப்போதும் விலக்கி வைக்கவே இல்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நான் குஜராத்தின் முதல்வராக இருந்த வேளையில், அப்போது சாமான்ய மக்களைச் சந்திப்பது, கலந்து பழகுவது என்பது வெகு இயல்பான விஷயமாக நடந்து வந்தது. முதல்வரின் பணிகள் மற்றும் நேரம் இப்படித் தான் இருந்தது, கலந்து பழகும், சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன. ஆனால் 2014ம் ஆண்டு, டெல்லிக்கு வந்த பிறகு, இங்கே வாழ்க்கை மிக வித்தியாசமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. பணியின் வகை வித்தியாசமானது, பொறுப்பு வித்தியாசமானது, நிலைமைகள், சூழ்நிலைகளின் கட்டுப்பாடு, பாதுகாப்பு தொடர்பான பகட்டு, குறைவான நேரம். தொடக்கக்கட்ட நாட்களில், நான் வித்தியாசமாக உணர்ந்தேன், ஒரே வெறுமையாக இருந்தது. என்னுடைய தேசத்தின் மக்களுடன் தொடர்பு கொள்வது கூட கடினமாக ஆகிவிடும் இந்த நிலைக்காக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக நான் வீட்டைத் துறக்கவில்லை. எந்த நாட்டுமக்கள் எனக்கு அனைத்துமாக இருக்கிறார்களோ, அவர்களிடமிருந்தே நான் துண்டிக்கப்பட்டு என்னால் எப்படி இருக்க முடியும்!? இந்தச் சவாலுக்கான தீர்வினை எனக்கு அளித்து, சாமான்ய மக்களோடு என்னை இணைக்கும் பாதையத் துலக்கிக் காட்டியது தான் மனதின் குரல். பதவிச்சுமை, வரைமுறை, ஆகியவை நிர்வாக அமைப்பு எல்லை வரை மட்டுமே இருந்தன; ஆனால் மக்களுணர்வு, கோடானுகோடி மக்களோடு, என்னுடைய உணர்வு, உலகின் பிரிக்க முடியாத அங்கமாகி இருந்தது. ஒவ்வொரு மாதமும் தேசத்தின் மக்களின் ஆயிரக்கணக்கான செய்திகளை நான் படிக்கிறேன், ஒவ்வொரு மாதமும், நாட்டுமக்களின் ஒன்றை மற்றது விஞ்சும் வகையிலான அற்புதமான வடிவங்களை தரிசிக்கிறேன். நாட்டுமக்களின் தவம்-தியாகத்தின் எல்லைகளையும் வீச்சுக்களையும் நான் காண்கிறேன், உணர்கிறேன். நான் உங்களை விட்டு விலகி இருக்கிறேன் என்ற உணர்வே என்னிடம் இல்லை!! என்னைப் பொறுத்த மட்டிலே மனதின் குரல், ஒரு நிகழ்ச்சி அல்ல, இது என்னுடைய நம்பிக்கை, இது என்னுடைய வழிபாடு, என்னுடைய விரதம். மக்கள் இறைவனை பூசிக்கச் செல்லும்போது, பிரசாதத் தட்டோடு திரும்பி வருகிறார்கள் இல்லையா!! என்னைப் பொறுத்த மட்டிலும், இறைவனின் வடிவமான மக்களின் பாதாரவிந்தங்களிலே பிரசாதத்தின் தட்டினைப் போன்றது மனதின் குரல். மனதின் குரல் என்னுடைய மனதின் ஆன்மீகப் பயணமாக ஆகி விட்டது. தான் என்ற நிலையிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய பயணம் தான் மனதின் குரல். நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் தான் மனதின் குரல். நானல்ல, நீ தான் என்ற நற்பதிவுப் பயிற்சி மனதின் குரல்.
மகளோடு செல்ஃபி எடுப்போம் இயக்கம்: நீங்களே கற்பனை செய்து பாருங்கள்! என் நாட்டுமக்களில் ஒருவர் 40 ஆண்டுகளாக, வனாந்திரத்திலே, வறண்ட பூமியிலே மரங்களை நட்டு வருகிறார், எத்தனையோ மனிதர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் பாதுகாப்பிற்காக ஏரிகளையும் குளங்களையும் ஏற்படுத்தி வருகிறார்கள், அதனைத் தூய்மைப்படுத்தி வருகிறார்கள். ஒருவர் சுமார் 30 ஆண்டுகளாக ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருகிறார், ஒருவர் ஏழைகளுக்கு மருத்துவச் சிகிச்சையில் உதவி வருகிறார். எத்தனையோ முறை மனதின் குரலில் இவர்களை எல்லாம் பற்றிக் குறிப்பிட்டு நான் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறேன். ஆகாசவாணியின் நண்பர்கள் எத்தனையோ முறை இவற்றை மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. இன்று, இவை அத்தனையும் என் கண்களின் முன்னே வந்து செல்கின்றன. என்னை நானே மேலும் மேலும் சமர்ப்பித்துக் கொள்வதற்கு, நாட்டுமக்களின் இந்த முயற்சிகள் தொடர்ந்து எனக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன. மனதின் குரலில் யாரைப் பற்றி எல்லாம் நாம் குறிப்பிடுகிறோமோ, அவர்கள் நமது நாயகர்கள். இவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை உயிர்ப்புடையதாக, உயிரோட்டமுடையதாக ஆக்கியிருக்கின்றார்கள். இன்று நாம் 100வது பகுதி என்ற கட்டத்தை எட்டியிருக்கும் வேளையிலே, என்னுடைய இன்னொரு ஆசை என்னவென்றால், நாம் மீண்டும் ஒரு முறை, இந்த நாயகர்கள் அனைவரையும் அணுகி, அவர்களுடைய பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இன்று நாம் சில நண்பர்களோடு உரையாட முயல்வோம். என்னோடு இப்போது இணைந்திருப்பவர், ஹரியானாவைச் சேர்ந்த சகோதரர் சுனில் ஜக்லான். சுனில் ஜக்லான், என் மனதில் ஏன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றால், ஹரியானாவின் பாலின விகிதம் பெரும் சர்ச்சைக்குட்பட்டதாக இருந்தது. ‘பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிப்போம்’ இயக்கத்தை ஹரியானாவில் நான் தொடக்கினேன். இதற்கிடையில் சுனில் அவர்கள், மகளோடு செல்ஃபி எடுப்போம் என்ற இயக்கத்தின் மீது என் கவனம் சென்றபோது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் அவரிடமிருந்து கற்க முடிந்தது, அது மனதின் குரலில் இடம் பிடித்தது. பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையிலே மகளோடு ஒரு செல்ஃபி இயக்கம் ஒரு உலகாயத இயக்கமாக பரிணமித்தது. இதிலே விஷயம் செல்ஃபி எடுத்துக் கொள்வதோ, தொழில்நுட்பமோ அல்ல, இது மகள் தொடர்பானது, மகளின் முக்கியத்துவம் பற்றியது. வாழ்க்கையில் மகளின் இடம் எத்தனை மகத்தானது என்பது இந்த இயக்கம் வாயிலாக வெளிப்பட்டது. இப்படி ஏராளமான முயல்வுகளின் விளைவாகவே இன்று ஹரியானாவில் பாலின விகிதாச்சாரம் மேம்பாடு அடைந்திருக்கிறது. இன்று சுனிலோடு கலந்து பேசுவோம் வாருங்கள். (சுனில் ஜக்லானோடு பிரதமர் உரையாடினார்).
பெண்களின் சாதனைகள்: நண்பர்களே, மனதின் குரலில் நாம் நம் நாட்டின் பெண்சக்தியின் உத்வேகம் அளிக்கவல்ல பல நிகழ்வுகள், எடுத்துக்காட்டுகள் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பது பெரும் நிறைவை அளிக்கிறது. நமது ராணுவமாகட்டும், விளையாட்டு உலகமாகட்டும், நான் எப்போதெல்லாம் பெண்களின் சாதனைகள் பற்றி பேசினேனோ, அப்போதெல்லாம் அவர்களை மனம் நிறையப் பாராட்டியிருக்கிறேன். நாம் சத்தீஸ்கரின் தேவுர் கிராமத்தின் பெண்களைப் பற்றிப் பேசியிருந்தோம். இந்தப் பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் வாயிலாக, கிராமங்களின் நாற்சந்திகள், சாலைகள், கோயில்களில் தூய்மைப்பணி செய்வது என்பதை இயக்கமாகச் செய்து வருகிறார்கள். இதைப் போலவே தமிழகத்தின் பழங்குடியினப் பெண்கள், சூழலுக்கு நேசமான ஆயிரக்கணக்கான சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்தார்கள், இவர்களிடமிருந்தும் தேசம் நன்கு உத்வேகம் பெற்றது. தமிழகத்திலேயே 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் இருக்கும் நாக நதிக்கு புத்துயிர் ஊட்டினார்கள். இப்படி எத்தனை எத்தனையோ இயக்கங்களுக்கு நமது பெண்கள் சக்தி தான் தலைமை தாங்கியது, மனதின் குரல் அவர்களின் முயற்சிகளை முன்னிறுத்தக் கூடிய ஒரு மேடையாக மாறியது.
உழைப்பால் வெற்றி: நண்பர்களே, இப்போது நம்மோடு தொலைபேசியில் ஒரு நண்பர் இணைந்திருக்கிறார், இவருடைய பெயர் மன்சூர் அஹமது. மனதின் குரலில், ஜம்மு காஷ்மீரத்தின் பென்சில் ஸ்லேட்டுகள் பற்றிக் கூறும் வேளையில் மன்சூர் அஹமது அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டோம். (மன்சூர் அஹமதுவுடன் உரையாடினார் பிரதமர்). நண்பர்களே, நமது தேசத்திலே, இப்படி எத்தனையோ திறமை மிக்கவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் தங்களுடைய உழைப்பின் துணையால் வெற்றியின் சிகரம் வரை சென்றடைந்து இருக்கிறார்கள். எனக்கு நன்றாக நினைவுண்டு, விசாகப்பட்டினத்தின் வேங்கட முரளி பிரசாத், தற்சார்பு பாரதம் பற்றிய ஒரு அட்டவணையைப் பகிர்ந்திருந்தார். எப்படி தான் அதிகபட்ச பாரதப் பொருட்களையே பயன்படுத்துவதாக அவர் விளக்கியிருந்தார். பேதியாவின் பிரமோத், எல்.ஈ.டி பல்ப் தயாரிப்பு தொடர்பான ஒரு சின்ன அலகினை அமைத்த போது கட்முக்தேஷ்வரைச் சேர்ந்த சந்தோஷ், தரை விரிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார், மனதின் குரல் அவர்களுடைய பொருட்களை அனைவரின் முன்னிலையில் கொண்டு வர ஒரு சாதனமாக ஆனது. ‘பாரதத்தில் தயாரிப்போம்’ இயக்கத்தின் பல எடுத்துக்காட்டுகள் தொடங்கி, விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் வரை பல விஷயங்கள் குறித்து மனதின் குரலில் நாம் விவாதித்திருக்கிறோம். நண்பர்களே, உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், சில பகுதிகள் முன்பாக நான் மணிப்பூரைச் சேர்ந்த சகோதரி விஜயசாந்தி தேவி அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். விஜயசாந்தி, தாமரை நார்களைக் கொண்டு துணி நெசவு செய்கிறார். மனதின் குரலில் அவருடைய வித்தியாசமான, சூழலுக்கு நேசமான விஷயம் பற்றிப் பேசினோம், அவருடைய வேலை மேலும் பிரபலமாகிப் போனது. இன்று விஜயசாந்தி தொலைபேசித் தொடர்பில் நம்மோடு இருக்கிறார். (விஜயசாந்தியுடன் பேசினார் பிரதமர் மோடி)
பிறப்பெடுத்த மக்கள் இயக்கங்கள்: நண்பர்களே, மனதின் குரலின் மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. மனதின் குரல் வாயிலாக எத்தனையோ மக்கள் இயக்கங்கள் பிறப்பெடுத்திருக்கின்றன, வேகம் அடைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நமது விளையாட்டு பொம்மைகள், இவற்றை மீண்டும் நிறுவும் பேரியக்கம் மனதின் குரலிலிருந்து தான் தொடங்கப்பட்டது. பாரத ரக நாட்டு நாய்கள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் தொடக்கமும் கூட மனதின் குரலிலிருந்து தான் தொடங்கப்பட்டது. நாம் மேலும் ஒரு இயக்கத்தைத் தொடக்கினோம், நாம் சின்னச்சின்ன ஏழை விற்பனையாளர்களிடம் பேரம் பேச வேண்டாமே, சண்டை போட வேண்டாமே என்ற உணர்வைப் பெருக்கினோம். ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டபோது, அப்போதும் மனதின் குரல், நாட்டுமக்களை இந்த உறுதிப்பாட்டோடு இணைக்கும் சிறப்பான பங்களிப்பை ஆற்றியது. இப்படி ஒவ்வொரு எடுத்துக்காட்டும், சமூகத்தில் மாற்றத்திற்கான காரணிகளாக மாறின. சமூகத்திற்குக் கருத்தூக்கமளிக்கும் சவாலை, பிரதீப் சாங்க்வான் அவர்களும் மேற்கொண்டிருக்கிறார். மனதின் குரலில் நாம் பிரதீப் சாங்க்வான் அவர்களின் ஹீலிங் ஹிமாலயாஸ் இயக்கம் பற்றி விவாதித்தோம். அவர் தொலைபேசி இணைப்பில் இப்போது நம்மோடு தொடர்பில் இருக்கிறார். (பிரதீப் சாங்க்வானுடன் உரையாடினர் மோடி).
சுற்றுலாத்துறை வளர்ச்சி: நண்பர்களே, இன்று தேசத்தில் சுற்றுலா மிகவும் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. நமது இயற்கை ஆதாரங்களாகட்டும், நதிகள், மலைகள், குளங்கள் அல்லது நமது புனிதத் தலங்களாகட்டும், இவற்றைத் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. இவை சுற்றுலாத் தொழிலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சுற்றுலாவில் தூய்மையோடு கூடவே நாம் இன்கிரிடிபிள் இந்தியா (Incredible India) இயக்கம் பற்றியும் பல வேளைகளில் விவாதித்திருக்கிறோம். இந்த இயக்கத்தின் வாயிலாக மக்களுக்கு முதன் முறையாக, அவர்களுக்கு அருகிலேயே இருந்த பல இடங்களைப் பற்றிய தகவல் தெரிய வந்தது. நாம் அயல்நாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்வதற்கு முன்பாக, முதலில் நமது தேசத்தில் குறைந்த பட்சம் 15 சுற்றுலா இடங்களுக்குக் கண்டிப்பாகச் சென்று பார்க்க வேண்டும், மேலும் இந்த இடங்களுமே கூட நீங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறீர்களோ, அங்கிருப்பவையாக இவை இருக்கக்கூடாது, உங்கள் மாநிலத்தை விட்டு வெளியே வேறு ஒரு மாநிலத்தில் இவை அமைந்திருக்க வேண்டும். இதைப் போலவே, தூய்மையான சியாச்சின், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி, மின் கழிவுப் பொருட்கள் போன்ற தீவிரமான விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கலந்து வந்திருக்கிறோம். இன்று உலகனைத்துமே சுற்றுச்சூழலின் எந்த விஷயம் குறித்து இத்தனை பிரச்சினையில் சிக்கி இருக்கிறதோ, இதற்கான தீர்வு எனும் போது, மனதின் குரலின் இந்த முயல்வு மிகவும் முதன்மையானது.
ஔத்ரே ஆஸூலேவுடன் ஒரு உரையாடல்: நண்பர்களே, மனதின் குரல் தொடர்பாக இந்த முறை மேலும் சிறப்புச் செய்தி யுனெஸ்கோவின் தலைமை இயக்குநரான ஔத்ரே ஆஸூலேவிடம் இருந்து வந்திருக்கிறது. 100 பகுதிகளின் இந்த அருமையான பயணத்திற்கான நல்வாழ்த்துக்களை அளித்திருப்பதோடு, சில வினாக்களையும் இவர் எழுப்பி இருக்கிறார். முதலில் யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநரின் மனதின் குரலைச் செவி மடுப்போம், வாருங்கள்!!. யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்: வணக்கம் மாண்புமிகு, பிரியமான பிரதமர் அவர்களே, யுனெஸ்கோ அமைப்பின் சார்பாக மனதின் குரல் வானொலி ஒலிபரப்பின் 100வது பகுதியில் பங்கெடுக்கும் இந்த வாய்ப்பிற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். யுனெஸ்கோவுக்கும் இந்தியாவுக்கும் ஒரு நீண்ட பொதுவான சரித்திரம் உண்டு. நமது கட்டளைகளுக்கு உட்பட்ட அனைத்துத் துறைகளிலும் பலமான கூட்டுக்கள் நமக்கிடையே உண்டு. அது கல்வியாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரம் ஆகட்டும், தகவல் துறையாகட்டும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து இன்று நான் பேச விழைகிறேன். 2030ம் ஆண்டிற்குள்ளாக அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு தனது உறுப்பு நாடுகளுடன் யுனெஸ்கோ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு என்ற வகையில், எப்படி இந்த இலக்கை எட்டுவது என்பது குறித்து பாரதத்தின் வழி என்ன என்பதை விளக்க முடியுமா? இந்த ஆண்டு பாரதம் ஜி20 மாநாட்டிற்குத் தலையேற்கும் வேளையில் கலாச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பு செயலாற்றி வருகிறது. இந்த நிகழ்விற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். சர்வதேச செயல்திட்டத்தின் முதன்மை இடத்தில் கலாச்சாரத்தையும், கல்வியையும் பொருத்த பாரதம் எப்படி விழைகிறது? இந்த நல்வாய்ப்பிற்கு நான் மீண்டுமொருமுறை நன்றி தெரிவிக்கிறேன், உங்கள் வாயிலாக பரத மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். உங்களுக்குப் பலப்பல நன்றிகள். பிரதமர்: நன்றி, மாண்புமிகு தலைமை இயக்குநர் அவர்களே. மனதின் குரலின் 100வது பகுதியில் உங்களோடு உரையாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கல்வி, கலாச்சாரம் தொடர்பான முக்கியமான விஷயங்களை நீங்கள் எழுப்பியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
தன்னலமற்ற கல்விப்பணி: நண்பர்களே, யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர், கல்வி மற்றும் கலாச்சாரப் பராமரிப்பு தொடர்பான பாரதத்தின் முயல்வுகள் பற்றித் தெரிந்து கொள்ள விழைந்திருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களுமே மனதின் குரலில் விருப்பமான விஷயங்களாக இருந்து வந்திருக்கின்றன. விஷயம் கல்வி பற்றியதாகட்டும், கலாச்சாரம் பற்றியதாகட்டும், இவற்றின் பாதுகாப்பும், பராமரிப்பும் எனும் போது, பாரதத்திலே ஒரு பண்டைய பாரம்பரியம் உண்டு. இந்த நோக்கில், இன்று தேசத்தின் பணி புரியப்பட்டு வருகிறது என்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. தேசிய கல்வித் திட்டமாகட்டும், மாநில மொழிகளில் கல்வி என்ற தேர்வாகட்டும், கல்வியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாகட்டும், இப்படி அநேக முயல்வுகளை உங்களால் காண முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னால், குஜராத்தில், சிறப்பான கல்வியளிக்கப்படவும், கல்வி இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்கவும், ‘குணோத்ஸவ் ஔர் ஷாலா பிரவேஷோத்ஸவ்’ போன்ற திட்டங்கள் மக்கள் பங்களிப்பின் ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்கின. தன்னலமற்ற வகையிலே கல்விப்பணியில் ஈடுபட்ட பலரின் முயற்சிகளை நாம் மனதின் குரலில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கலாம், ஒரு முறை நாம் ஒடிஷாவில் வண்டியில் தேநீர் விற்பனை செய்யும், காலஞ்சென்ற டி. பிரகாஷ் ராவ் பற்றியும் விவாதித்திருக்கிறோம். இவர் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதைத் தனது இலக்காகக் கொண்டிருந்தார். ஜார்க்கண்டின் கிராமங்களில் டிஜிட்டல் நூலகத்தைச் செயல்படுத்தும் சஞ்ஜய் கஷ்யப் ஆகட்டும், கோவிட் பெருந்தொற்றின் போது, மின்வழி கற்றல் மூலமாக பல குழந்தைகளுக்கு உதவி புரிந்த என்.கே ஹேமலதா ஆகட்டும், இப்படி அநேக ஆசிரியர்களின் எடுத்துக்காட்டுகளை நாம் மனதின் குரலில் கையாண்டிருக்கிறோம். கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முயற்சிகளுக்கும் கூட மனதின் குரலில் நாம் தொடர்ந்து இடமளித்து வந்திருக்கிறோம்.
சமூக முயற்சிகளால் மாற்றம்: லட்சத்தீவுகளின் கும்மெல் பிரதர்ஸ் சேலஞ்சர்ஸ் கிளப் ஆகட்டும், கர்நாடகத்தின் க்வேமஸ்ரீ ஜி கலா சேதனா போன்ற மேடைகளாகட்டும், தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள், கடிதங்கள் வாயிலாக பல எடுத்துக்காட்டுக்களை எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாம் அந்த மூன்று போட்டிகள் பற்றியும் கூட பேசியிருந்தோமே…! தேசபக்திப் பாடல்கள், லோரி அதாவது தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகியவற்றோடு இணைந்தவை. உங்களுக்கு நினைவிருக்கலாம், தேசமெங்கும் கதை சொல்லிகளின் வாயிலாக கதை சொல்லுதல் மூலம், கல்வியில் பாரத நாட்டு வழிமுறைகள் குறித்தும் ஒரு முறை நாம் பேசியிருந்தோம். சமூக முயற்சிகள் வாயிலாக பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆண்டு நாம் சுதந்திரத்தின் அமுதக்காலத்தில் நடை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஜி20 மாநாட்டிற்குத் தலைமையேற்றுக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவும் கூட கல்வியோடு சேர்ந்து பலவகைப்பட்ட உலகக் கலாச்சாரங்களைச் செறிவானவையாக்க, நமது உறுதிப்பாடு மேலும் பலப்பட்டு இருக்கிறது.
பயணித்துக் கொண்டே இரு: எனதருமை நாட்டுமக்களே, நமது உபநிடதங்களின் ஒரு மந்திரம், பல நூற்றாண்டுகளாகவே நமது ஆவியில் கலந்து நமக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறது. “சரைவேதி சரைவேதி சரைவேதி – (பயணித்துக் கொண்டே இரு, பயணித்துக் கொண்டே இரு, பயணித்துக் கொண்டே இரு). இன்று நாம் இதே பயணித்துக் கொண்டே இரு என்ற உணர்வோடு மனதின் குரலின் 100வது பகுதியை நிறைவு செய்கிறோம். பாரதத்தின் சமூகத்தின் ஊடும் பாவும் பலப்படுத்தப்படுவதில், மனதின் குரலானது ஒரு மாலையின் இழை போல செயல்படுகிறது, இது அனைத்து மனங்களையும் இணைத்து வைக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் நாட்டுமக்களின் சேவை மற்றும் திறமைகள், மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் நாட்டுமக்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களுக்குக் கருத்தூக்கம் அளித்திருக்கின்றனர். ஒரு வகையில், மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியும், அடுத்த பகுதிக்கான களத்தைத் தயார் செய்தளிக்கிறது. மனதின் குரலில் எப்போதும் நல்லிணக்கம், சேவை உணர்வு, கடமை உணர்ச்சி ஆகியவையே முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்தின் அமுதக்காலத்தில், இந்த நேர்மறை எண்ணமே தேசத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடியது, புதிய உயர்வுகளுக்குக் கொண்டு செல்லக்கூடியது, மனதின் குரலால் ஏற்பட்ட தொடக்கம், அது இன்று புதிய பாரம்பரியமாகவும் ஆகியிருக்கிறது என்பது எனக்கு மிகப்பெரிய நிறைவை அளிக்கிறது. இது எப்படிப்பட்ட பாரம்பரியம் என்றால் இதிலே நம்மனைவரின் முயற்சிகளின் உணர்வு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அனைவருக்கும் நன்றி: நண்பர்களே, நான் இன்று ஆகாசவாணியின் நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்; இவர்கள் மிகுந்த பொறுமையோடு, இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் பதிவு செய்கிறார்கள். மிகவும் குறைவான காலத்திற்குள்ளாக, மிகவும் விரைவாக மனதின் குரலை பல்வேறு மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தூர்தர்ஷன் மற்றும் மைகவ்’ன் நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். விளம்பர இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பும், நாடெங்கிலும் இருக்கும் டிவி சேனல்கள், மின்னணு ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். நிறைவாக, மனதின் குரலை வழிநடத்தும், பாரத நாட்டு மக்கள், பாரதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்போர் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இவை அனைத்தையும், நீங்கள் அளிக்கும் உத்வேகம், நீங்கள் தரும் பலத்தால் மட்டுமே சாதிக்க முடிந்திருக்கிறது.