ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி தி.மு.க தலைவரது குடும்பம், அமைச்சர்கள் என பலரது சொத்துப் பட்டியலை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் மீது ஊழல் புகாரை சுமத்தினார். இதனை மறுத்துள்ள தி.மு.க, அண்ணாமலைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதி கூறியதை மறுத்துள்ள அண்ணாமலை, தற்போது அந்த அவதூறு புகாரில் ஆர்.எஸ். பாரதி மன்னிப்பு கேட்கவேண்டும் என ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இல்லையெனில் ரூ. 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், ஆர்.எஸ். பாரதி மீது கிரிமினல், சிவில் வழக்கு தொடுக்கப்படும் என்று நோட்டீசில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தி.மு.கவினரின் சொத்துப்பட்டியல் வீடியோவை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு தி.முக. எம்.பி. கனிமொழி தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அண்ணாமலை ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும். 48 மணிநேரத்திற்குள் அவதூறு வீடியோவை நீக்கவேண்டும். தவறும் பட்சத்தில் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி டி.ஆர். பாலு ஆகியோர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது நினைவு கூரத்தக்கது.