மேற்கு வங்கம் கலியாகஞ்சில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலவிய பதட்டமான சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு மத்தியில், தங்கள் கட்சியின் தொண்டர் ஒருவரை மாநில காவல்துறை சுட்டுக் கொன்றதாக அம்மாநில பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ.க எம்பி தேபாஸ்ரீ சௌத்ரி, மேற்கு வங்க காவல்துறையை இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டினார். ஆளும் திருணமூல் காங்கிரஸ் கட்சியினரால் இதுபோன்ற பழிவாங்கும் கைதுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் எங்கள் கட்சியை நீங்கள் அடக்கிவைக்க முடியாது, முழு நாடும் எங்களுடன் உள்ளது” என்று கூறினார். கடந்த புதன்கிழமை இரவு கலியாகஞ்சில் பா.ஜ.க கட்சியின் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் பிஷ்ணு பர்மனை கைது செய்ய வந்த மாநில காவல்துறை அதிகாரிகளால் பா.ஜ.க தொண்டர் மிருதுஞ்சய் பர்மன் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. “பிஷ்ணு பர்மனைக் கைது செய்ய வந்து அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் பா.ஜ.கவின் தீவிர உறுப்பினரான அவரது மருமகன் மிருத்யுஞ்சாய் பர்மனைக் கொன்றனர்” என்று பா.ஜ.க எம்.பி., கூறியதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும், கலியாகஞ்ச் காவல் நிலைய தாக்குதலை பா.ஜ.க நடத்தியதாக பரப்பப்படும் செய்திகளை மறுத்த அவர், “காவல் நிலையத்தை மர்ம நபர்கள் தாக்கிய வீடியோ காட்சிகளும் எங்களிடம் உள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவோம். மேற்கு வங்கத்தில் இருந்து பா.ஜ.கவை ஒழிக்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்” என்று கூறினார்.
“நேற்று மதியம், மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரிய உத்திர தினாஜ்பூர் மக்கள் மீது அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி போர் பிரகடனம் செய்ததை அடுத்து, மேற்கு வங்க காவல்துறை, அதிகாலை 2.30 மணிக்கு பா.ஜ.க பஞ்சாயத்து சமிதி உறுப்பினரின் விஷ்ணு பர்மன் வீட்டிற்குள் குறிவைத்தது போல் நுழைந்தது. அவரைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியிலும், தங்கள் அரசியல் எஜமானரைப் பிரியப்படுத்தவும் விரும்பி, மிருத்யுஞ்சயை சுட்டுக்கொன்றனர். மமதா பானர்ஜி ஆட்சியின் கீழ் மேற்குவங்கத்தில் ஜனநாயக விரோத, ரத்தக்களரி ஆட்சி நடந்து வருகிறது. மே 2021ல் சட்டமன்ற முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று அது தொடங்கி இன்றுவரை அது நடந்து வருகிறது” என்று பா.ஜ.கவின் அமித் மாளவியா டுவீட் செய்துள்ளார்.