காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பி.ஜி.சங்கர். இவர், வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், பா.ஜ.க. எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்கிற மனைவியும், 15 மற்றும் 12 வயதில் இரு மகன்களும் உள்ளனர். பழைய இரும்புகளை வாங்கி விற்கும் ஸ்கிராப் தொழில் செய்து வந்தார் சங்கர். இவர், சென்னை கொளத்தூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கடந்த 27ம் தேதி இரவு காரில் தனது வீடு திரும்பினார். அவரது கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை நாசரத்பேட்டை வரதராஜபுரம் அருகே வந்தபோது, 2 கார்களில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல், சங்கர் காரை வழிமறித்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். ஆனால், விடாமல் அவரை விரட்டிச் சென்ற கும்பல், நடுரோட்டில் வைத்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, காரில் ஏறி தப்பிச் சென்றது. இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். கையாலாகாத தி.மு.க. ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சங்கர் மீது நாட்டு வெடிகுண்டு வீசும் முயற்சி நடந்தது. அவர்களை காவல்துறை கைது செய்தது. எனினும் அதன் பிறகும் சங்கருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் 9 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் சரத், சங்க குமார், ஜெயன், சஞ்சீவ், குணா, சந்தான குமார், தினேஷ், உதயகுமார், ஆனந்த் ஆகிய 9 பேர் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர். தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக சங்கரை கொலை செய்ததாக சரணடைந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.