சாதனை படைக்கும் தமிழகம்

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, தி.மு.க அரசு தமிழகத்தில் பதவியேற்றது முதல் தமிழகம் எதில் முதல் இடத்தில் உள்ளதோ இல்லையோ கடன் வாங்குவதில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் விற்பனையிலும் தமிழகம் முதலிடம் வகிப்பது வேறு விஷயம். கடந்த நிதியாண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள ஆந்திர மாநிலம் ரூ. 51,860 கோடியுடன் 2ம் இடத்திலும் மகாராஷ்டிரா ரூ. 50 ஆயிரம் கோடியுடன் 3ம் இடத்திலும் உள்ளன. இதற்கு முந்தைய 2 நிதியாண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. அவ்வகையுல் 2021ம் நிதியாண்டில் ரூ. 87,977 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு, 2022ம் நிதியாண்டில் ரூ. 87 ஆயிரம் கோடியும் கடன் வாங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் மகாராஷ்டிரா ரூ. 25,000 கோடியும், தமிழகம் ரூ. 24,000 கோடியும், ஆந்திரா ரூ. 20,000 கோடியும் கடன் வாங்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே மொத்த கடனில் 35 சதவீதத்தை வாங்கும் என ஐ.சி.ஆர்.ஏ என்ற நிதி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வு செய்தபோது, கடந்த நிதியாண்டில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை கடன் வாங்குவதை பெருமளவு குறைத்துள்ளன. ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகியவை கடந்த 2021ம் நிதியாண்டில் வாங்கிய கடனைவிட 2022ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் அதிக கடன் வாங்கியுள்ளன என கூறப்பட்டுள்ளது.