மத அடிப்படையில் இடஒதுக்கீடு தவறு

கர்நாடக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “மத அடிப்படையில் வழங்கப்படும் எந்தவொரு இட ஒதுக்கீடும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையே. இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியில் உள்ளதால், உத்தரப் பிரதேசத்தில் இரட்டை இயந்திர அரசு மிக வேகமாக மக்கள் நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக உ.பியில் கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் ஏற்படவில்லை. தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) போன்ற மத அடிப்படைவாத அமைப்புகளை திருப்திப்படுத்துவதற்காகவே, அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் விரோதமாக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் ஆதரவளித்து வருகிறது. அதேநேரம், பி.எப்.ஐ அமைப்புக்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் நாடு முழுவதும் தடைவிதித்து பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கைகள் முஸ்லிம் பயங்கரவாத, அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகள் பலவீனமாக்கியுள்ளது. பாரதம் ஏற்கனவே, 1947ல் மத அடிப்படையிலான ஒரு பிரிவினைக்கு உள்ளானது. இதனால், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது. மற்றொரு பிரிவினைக்கு நாங்கள் ஒருபோதும் தயாராக இல்லை” என்று  கூறினார்.