இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதத்தில் காசியை போன்று உலக பிரசித்திபெற்ற தலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஆகும். 1960களில் வந்த சுனாமி பேரலையால் தனுஷ்கோடி அழிந்தது. அதன் பிறகு அத்தீவை புனரமைக்க எந்த முயற்சியும் மாநில மத்திய அரசுகள் எடுக்கவில்லை. தனுஷ்கோடியை மீட்க இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் 1996ல் ஒரு கோடி ‘ராமநாம ஜப வேள்வி’யை நடத்தினார். பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஆகும். அதன்பிறகு தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை இருக்கும் ராமர் பாலத்தை சேது சமுத்திர திட்டத்தை கூறி இடிக்க முயன்றனர். அதையும் மக்கள் சக்தி கொண்டு முறியடித்து காப்பாற்றியது இந்து முன்னணி. மீண்டும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி புனரமைக்கப்பட்டு இரயில் சேவை துவக்க மத்திய அரசு 90 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் தனுஷ்கோடி புனரமைத்து தேசிய ஆன்மிக சுற்றுலா தலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழக அரசோ குப்பையில் புழுவையும் அழுக்கையும் தேடி கிளறும் கோழியை போல, மக்கள் நிம்மதியை கெடுக்கும் டாஸ்மாக் மதுபான வருமானத்தை பெருக்க திட்டம் தீட்டி வருவது வேதனைக்குரியது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காசியை புனரமைத்ததால் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அதேபோல தனுஷ்கோடி ரயில் திட்டம் நிறைவேறினால் இப்போது உள்ளது போல் பல மடங்கு யாத்ரீகர்கள் வருகை அதிகரிக்கும். இதனால் மாநிலத்திற்கு பல நன்மைகள் பெருகும். எனவே உடனடியாக ராமேஸ்வரம் தனுஷ்கோடி இரயில் திட்டம் நிறைவேற்ற இடங்களை கையகப்படுத்தித் தர இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.