நிதீஷ் குமாருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்டனம்

ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முன்னாள் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் மோகன் விடுதலையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கிருஷ்ணய்யா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி 1994ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் மூளையாக செயல்பட்ட கேங்க்ஸ்ட மோகன் ஆனந்த் கைது செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் பிரபல ரௌடியாக இருந்த மோகன் ஆனந்த், பின்னர் தன் அரசியல் செல்வாக்கால் எம்.பியும் ஆனார். இந்நிலையில், அவர் மீது நடைபெற்று வந்த கொலை வழக்கை விசாரித்துவந்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2007ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. பாட்னா நீதிமன்றத்தி செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அது 2008ம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மோகன் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், 2007ம் ஆண்டிலிருந்து அந்த கேங்க்ஸ்டர் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில், பீகார் அரசு, பீகார் சிறை சட்டம் 2012ல் சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. அதன் மூலம், மன்னிப்புக்குத் தகுதியான 27 பேர் கொண்ட பட்டியலில் இந்த கேங்க்ஸ்டரும் இடம்பெற்றுள்ளர். இதனால் ஆனந்த் மோகன் விடுதலையாகும் சூழல் உருவாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் எம்.எல்.ஏவாக உள்ள தனது மகன் சேத்தன் ஆனந்தின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக ஆனந்த் மோகன் தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆதாயத்திற்காக சிறை சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதன்மூலம் ஆனந்த் மோகன் விடுதலையாக வழிவகுத்துக் கொடுத்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார். ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த் மோகன் இப்போது விடுவிக்கப்படுவது, கணிசமான வாக்குவங்கி கொண்ட அச்சமூகத்தினரின் வாக்குகளை வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெறுவதற்காக நிதீஷ் குமார் நடத்தும் நாடகம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. “ஆனந்த் மோகனை விடுதலை செய்வதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிறைத்துறை சட்டங்களில் திருத்தம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கிருஷ்ணய்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நேர்மையான அதிகாரி. அவரை கொலை செய்த நபரை விடுவிக்கும் நிதீஷ் குமார் அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது” என்று மாயாவதி கூறியுள்ளார்.

மத்திய சிவில் சர்வீசஸ் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய சிவில் மற்றும் நிர்வாக சேவை (மத்திய) சங்கம் சார்பில், நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ஆனந்த் மோகனை விடுவிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பீகார் அரசை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த முடிவைப் பற்றி தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்திய சங்கம், இது நீதி மறுப்புக்கு ஒப்பானது. இத்தகைய நீர்த்துப்போக வைக்கும் திருத்தங்கள், கொடிய குற்றவாளீகள் தண்டனையிலிருந்து விடுபடுவதற்கும் பொது ஊழியர்களின் மன உறுதியைக் குறைப்பதற்கும் பொது ஒழுங்கைக் குழி தோண்டி புதைப்பதற்கும் நீதி நிர்வாகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதற்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.