ஏப்ரல் 30ம் தேதி ஒளிபரப்பப்படவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர உரையின் 100வது பதிப்பிற்கு முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த மன் கி பாத் @100 என்ற தேசிய மாநாட்டில் பிரபல பாலிவுட் நடிகர் அமிர் கான் கலந்து கொண்டார். அவருடன் நடிகை ரவீனா டாண்டன், டி.வி மோகன்தாஸ் பய், கிரண் பேடி, நிகத் ஜரீன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய நடிகர் அமீர் கான், “நமது தலைவரின் இத்தகைய முயற்சி மிகவும் முக்கியமானது. இது உரையாடல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் வழிவகுக்கிறது. நாட்டின் தலைவர் மக்களுடன் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது, எண்ணங்களை முன்வைப்பது மற்றும் ஆலோசனைகளை வழங்குவது போன்ற மிக முக்கியமான தகவல்தொடர்பு இது. அப்படித்தான் நீங்கள் தொடர்பு கொண்டு வழிநடத்துகிறீர்கள். நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள், எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் மக்களுக்குச் சொல்கிறீர்கள். அதில் அவர்களின் ஆதரவை நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்? மனதின் குரலில் நடக்கும் மிக முக்கியமான தகவல் தொடர்பு இதுதான்” என்றார்
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கேட்டுள்ளனர் என ஐ.ஐ.எம் ரோஹ்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதன் ஆய்வில், “குறைந்தது இருபத்தி மூன்று கோடி பேர் பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர பேச்சை கேட்டுள்ளனர். வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு முறையாவது கேட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி பற்றி 96 சதவீதம் பேர் அறிந்திருக்கின்றனர். 41 கோடி பேர் அவ்வப்போது நிகழ்ச்சியை கேட்பவர்களாக இருந்து பின்னர் அனைத்து உரைகளையும் தொடர்ந்து கேட்பவர்களாக மாறியுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி ஒலிபரப்பான ‘மன் கி பாத்’ மே 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுடன் இணைக்க அவர் மேற்கொண்ட தனித்துவமான முயற்சிகளில் ஒன்றாகும். மக்கள் எப்போதாவது வானொலியைக் கேட்டு எஃப்எம் நிலையங்களை விரும்பும்போது, பிரதமர் மோடி தேசிய ஒலிபரப்பான அகில இந்திய வானொலியில் (AIR) நாட்டின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார். மனதின் குரல் மாதாந்திர ஒலிபரப்பினால் அது ஊரின் பேச்சாக மாறியது. அந்த மாதம் பிரதமர் மோடி என்ன பேசுவார் என்பதை அறிய ஏராளமான மக்கள் நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இதனால், அகில இந்திய வானொலி கடந்த மாதம், நிகழ்ச்சிக்கான விளம்பரங்களுக்காக செலவிட்டத் தொகையை விட கிட்டத்தட்ட 5 மடங்கு வருவாயை ஈட்டியுள்ளது தெரிய வந்தது.