உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 பாரத சமூகத்தினரை மீட்டு அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. சூடாலில் சிக்கித் தவிக்கும் பாரதத்தினரை வெளியேற்றுவதற்கு வசதியாக சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையேயான பேச்சுவார்த்தையை அடுத்து 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனை பயன்படுத்தி அங்குள்ல பாரத சமூகத்தினரை வெளியேற்றும் முயற்சிகளை மத்திய அரசின் வெளியுறவுத்துறை விரைவுபடுத்தியுள்ளது. அவ்வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 பே மீட்கப்பட்டனர். அந்த குழுவினர் பாரத கடற்படையின் ஐ.என்.எஸ் சுமேதா கப்பல் மூலம் பாரதம் புறப்பட்டனர். மற்றவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சூடானில் உள்ள பாரத மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை கவனிப்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் ஜெட்டா சென்றுள்ளார். இதனிடையே, சூடானில் சிக்கியுள்ள இலங்கை மக்கள் 30 பேரையும் அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வர பாரதம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசை இலங்கை பாராட்டியுள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டர் பதிவில், “சூடானில் தவித்து வரும் இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் பாரதம் ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளது. அதை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்த சில நாட்களில் இது நடந்தேறும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.