பாரதத்தின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக பனாமா சென்றுள்ளார். பனாமாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் விளாடிமிர் பிராங்கோஸ், ஜெய்சங்கரை வரவேற்றார். பின்னர் லத்தீன் அமெரிக்கா வணிக நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதம் பனாமா வணிக ஒத்துழைப்பு வலுவான வாய்ப்புகள் மற்றும் தகுதிகளை மையமாகக் கொண்ட முயற்சிகளைக் கொண்டிருப்பதற்கான பத்து முக்கிய காரணங்களை எடுத்துரைத்து முக்கிய உரையை நிகழ்த்தினார். இதையடுத்து, பனாமாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜைனனா டெவானி மென்கோமோவுடன் சுகாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல இருதரப்பு விவகாரங்கள் பற்றி விவாதித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கடைப்பிடிக்கும் அண்டை நாட்டுடன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மிகவும் கடினம்” என பாரதத்துக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கடைப்பிடிக்கும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். மேலும், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும், அதற்கு ஸ்பான்சர் செய்வதும், செயல்படுத்துவதும் இல்லை என்ற உறுதியை அவர்கள் வழங்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். ஒரு நாள் அந்த நிலையை அடைவோம் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம்” என கூறினார். அவரது பனாமா விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று அவர் கொலம்பியா சென்றார். அங்கு அவர் அரசு, வணிகம் மற்றும் சிவில் சமூகத்தின் பல உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திப்பார். அவரது கொலம்பியா பயணம் அந்நாட்டிற்கு பாரதத்திற்கான வெளியுறவுத்துறை அமைச்சர் அளவிலான முதல் விஜயமாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெய்சங்கர் மற்றும் கொலம்பியாவின் இணை தலைவர் அல்வாரோ லீவா டுரன் இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்வார்கள். அவரது கொலம்பியா பயணத்தைத் தொடர்ந்து, ஜெய்சங்கர் டொமினிகன் குடியரசிற்குச் செல்வார். டொமினிகன் குடியரசுக்கான விஜயம் 1999ல் இருதரப்பு தூதரக உறவுகளை நிறுவியதில் இருந்து பாரதத்தின் மிக உயர்ந்த அளவிலான விஜயமாகும். 2022ல் சாண்டோ டொமிங்கோவில் பாரதத் தூதரகம் நிறுவப்பட்ட பின்னர் ஜெய்சங்கரின் வருகை நடைபெறுகிறது.