வெளிநாடுகளில் உள்ள நமது பெருமைமிகு தேசிய பாராம்பரிய கலைப்பொருட்களை தாயகத்திற்கு மீட்டுவருவதற்கு மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், பொட்டவெளி வெள்ளூரைச் சேர்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் விஷ்ணு கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 15ம் நூற்றாண்டு சோழர் கால ஹனுமன் உலோக சிலை, மீட்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள பாரதத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதுவரை 251 பழமைவாய்ந்த பொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 238 பொருட்கள், கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நமது பெருமைமிகு பாரம்பரியத்தை தாயகத்திற்கு மீட்டுவருவதை உறுதிசெய்வதற்கு நாங்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.