பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும், ‘மன் கி பாத்’ எனப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இம்மாதத்தில் 100வது அத்தியாயத்தை நிறைவு செய்ய உள்ளது. இதுவரை ஒலிபரப்பான உரைகளில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி தொடர்பாக மிக அதிகளவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வானொலி உரையில் அதிகளவில் குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் ஆழம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இந்த தளத்தை நமது பிரதமர் அதிகம் பயன்படுத்தி உள்ளார்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி தொடர்பாக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகின் பழமையான மொழி நமது நாட்டில் தோன்றியது என்பதை நினைத்து ஒவ்வொரு பாரதத்தினரும் இதில் பெருமைகொள்ள வேண்டும் என்று பெருமிதத்துடன் வலியுறுத்தியுள்ளார். அழகான மொழியாகவும், உலகப் புகழ்பெற்ற மொழியாகவும் உள்ள தமிழ் மொழியைக் கற்கவில்லை என்பதற்காக வருத்தம் அடைவதாகவும் பிரதமர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் உரையின் பல அத்தியாயங்களில் பிரதமர் மோடி, தமிழ் மக்கள் செலுத்தும் சிறந்த தாக்கம் மற்றும் பங்களிப்புகள் தொடர்பாக பல்வேறு உதாரணங்களைப் பகிர்ந்துள்ளார். வேலூரில் நாக நதியை மீட்டெடுத்து சீரமைக்க 20 ஆயிரம் பெண்கள் இணைந்து செயல்பட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் தாக்கத்தைக் குறைத்து மண்வளத்தைக் காக்க பனைமரங்கள் நடப்படுவது போன்ற கூட்டு முயற்சிகளை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் வெளிப்படுத்தி பாராட்டு தெரிவித்தார். பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சீரமைக்க தாராளமாக பணம் வழங்கிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாயம்மாள் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியுள்ளார்.
வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் தமிழின் அடையாளச் சின்னமாகவும் விளங்கும். திருக்குறளின் உலகளாவிய புகழ் தொடர்பாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல்வேறு வழிகளில் தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை தொடர்ந்து ஊக்குவித்து அதன் செழுமையை வெளிப்படுத்தி வருகிறார் நமது பிரதமர். அத்துடன் தமிழின் ஆழத்தையும், சிறப்பையும் பாராட்டி அதை ஆராயும் ஆர்வத்தை மற்றவர்களுக்கு பிரதமர் ஏற்படுத்தி வருகிறார்.