திருஞான சம்பந்தர் பாடல் பதிந்த தங்க ஏடு

மதுரை மாவட்டம் திருவேடகத்தில் பழமையான ஏடகநாதர் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர் சுவடிகள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது கோயிலில்  திருஞான சம்பந்தர் பாடல் பதியப்பட்ட தங்க ஏடும், கோயில் வரவு செலவு கணக்கு அடங்கிய சுவடிக் கட்டும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக தங்க ஏட்டில் பக்தி இலக்கியப் பாடல் பதிந்த நிலையில் கிடைப்பது இதுவே முதல்முறை என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கோயில் தல புராணப்படி திருஞானசம்பந்தர் ‘வாழ்க அந்தணர்’ எனும் பதிகம் எழுதி, வைகை நதியில் இட்டதன் நினைவாக அந்தப் பாடலைத் தங்க ஏட்டில் எழுதி பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. எழுதப்பட்ட காலம் குறித்த குறிப்பு இல்லை. அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.