பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா பவுஜ்’ என்ற பெயரில் பயங்கரவாதக் குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முடிவு செய்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார். அவர் நேபாளத்துக்கு தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளினது. அவர் ஆடியோ, வீடியோ என்று வெளியிட்டு காவல்துறைக்கு சவால் விடுத்து வந்தார். இந்நிலையில் 37 நாட்களுக்குப் பின்னர் அவர் காலிஸ்தானி பயங்கரவாதி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் பிறந்த இடமான பஞ்சாப்பில் உள்ள மோகா மாவட்டத்தின் ரோடே கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரணடைவதற்கு முன், பேசிய இந்த பயங்கரவாதி, “இன்று இந்த புனித ஸ்தலத்தில், சந்த் கியானி ஜர்னைல் சிங் கல்சா பிந்திரன்வாலே பிறந்த இடம், அதே இடத்தில் நான் என் தஸ்தார்பந்தியை வைத்திருந்தேன், நாங்கள் இந்த வேலையை கௌமுக்காகத் தொடங்கினோம். தற்போதைய சூழ்நிலை வாழ்க்கையின் முக்கியமான தருணம். சீக்கிய சமூகத்திற்கு எதிராக அரசாங்கத்தால் அட்டூழியங்கள் நடந்துள்ளன. நாட்டின் சட்டத்தின் பார்வையில் நான் குற்றவாளியாக இருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில் குற்றமற்றவன். கடந்த ஒரு மாதமாக, சீக்கியர்களுக்கு அரசு இழைத்த கொடுமைகள் அனைத்தும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. என்னைக் கைது செய்யப் பல வழிகள் இருந்தன, அதற்கு நான் ஒத்துழைத்திருப்பேன். ஆனால் அரசின் முகம், உலகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டிய விஷயம், இப்போது சீக்கிய இளைஞர்கள் மீது குவிக்கப்பட்ட கொடுமையால் நடந்துள்ளது. நான் இந்த மண்ணில் போராடினேன், இந்த மண்ணில் தொடர்ந்து போராடுவேன். என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்குகள் அனைத்தையும் நான் நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன். இந்த கைது முடிவல்ல. ஆரம்பம்” என்று கூறினார்.
இந்த கைது குறித்து பஞ்சாப் காவல்துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அம்ரித்பால் சிங், மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் உள்ள குருத்வாராவில் சரணடைந்தார். ரோடே கிராமத்தில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து நாங்கள் அப்பகுதியை சுற்றிவளைத்தோம். தப்பிக்க வேறு வழி இல்லாததால் அவர் சரணடைந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ரித்பால் சிங்குக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மூலம் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பெற்று பஞ்சாபில் இளைஞர்களை துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு தூண்டுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. அம்ரித்பால் சிங் மீது ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.