தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில், “உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில், அவர்களது மூதாதயரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி, 20 கோடி என சிறுக சிறுக குவித்தது, அது தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்” என்று அந்த ஆடியோவில் பேசப்பட்டிருந்தது. இது நாடெங்கும் பரபரப்பானது. இதனை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பா.ஜ.க தரப்பில் முதல்வர் ஸ்டாலின் இடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்த சூழலில் அந்த ஆடியோ போலியானது. அது போலி என்பதற்கான தொழில்நுட்ப ரீதியான ஆதாரமும் உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.