கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைக்க வரும் 24ம் தேதி பிரதமர் மோடி கொச்சி செல்லவிருக்கிறார். இந்தநிலையில், பிரதமர் மோடியின் கொச்சி வருகையின்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என்று, அம்மாநில பா..ஜக அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், அனுப்பியவர் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடித்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். ஆனால், அந்த நபர், தான் எந்தக் கடிதமும் அனுப்பவில்லை என்றும், தன்னுடைய எதிரிகள் தன்னை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கத்தில் தனது பெயரைப் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநில அரசிடம் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கூடுதல் விவரங்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் கோரின. பாதுகாப்பு ஏற்பாடுகளை குறிக்கும் ஏ.டி.ஜி.பியின் கடிதத்தில், தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உட்பட பல்வேறு மத அடிப்படைவாத அமைப்புகளால் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பின் கடிதம் ஊடகங்களில் கசிந்தது குறித்து கவலை தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், இது மாநில காவல்துறையில் உள்ள குறைபாடுகளையே வெளிக்காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். எனினும், பிரதமரின் கேரள வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாநில பா.ஜ.க தலைவர் சுரேந்தரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்தரன், “பிரதமரின் கேரள வருகை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உத்வேகம் அளிக்கும். மக்களிடம் பிரதமரின் வருகை குறித்த பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. யுவம் மாநாடு கேரளாவில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரும். அரசியலுக்கு அப்பாற்பட்டு கேரளாவின் வளர்ச்சியை கொண்டுவரும். அனைத்து இளைஞர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.