ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தேசிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தெரியவந்ததும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினர் குறித்து வடக்கு பிராந்திய ராணுவ படை தலைமையகம் சார்பில் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முமமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. அவர்களை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையை ராணுவ உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.