திரைத் துறையுடன் இணைந்து பணியாற்ற தயார்

சென்னையில் நடந்த தக்ஷின் தென்னிந்திய ஊடக கேளிக்கை உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கலந்து கொண்டு பேசுகையில், “விளையாட்டு மற்றும் திரைத்துறை ஆகிய இரு துறைகளும் உலகளாவிய எல்லைகளைத் தாண்டி பயணிக்கக் கூடியவை. அடுத்த தலைமுறைக்கான பாரத திரைத்துறை வல்லுநர்களை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கு திரைப்படத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இன்றைய திரைப்படங்கள், சமூக விழுமியங்களையும் கலாசாரங்களையும் சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகளையும் உண்மைத் தன்மையோடு பிரதிபலிக்கின்றன. நமது புதிய பாரதத்தை உலகளாவிய ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நமது பிராந்திய திரைப்படங்களில் உள்ள உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும். இளைஞர்களின் மனப்போக்கை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்ததாக கதைக் களங்கள் அமைக்கப்பட வேண்டும். உலகிலேயே மாபெரும் திரை துறையாக விளங்கும் நமது நாட்டின் திரைத்துறை மிகச் சிறந்த உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய மையமாக விளங்குவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.  உலக அளவில் கலைத் திருட்டால் (பைரசி) ஆண்டு தோறும் திரைத்துறைக்கு சுமார் 20 ஆயிரம் கோடி டாலர் நஷ்டம் ஏற்படுகிறது. பாரதத்தில் கலை திருட்டை முற்றிலுமாக தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு ஆண்டும் பாரதத்தின் திரைத்துறை தனது படைப்பாற்றல், தயாரிப்புத் திறன், தொழில்நுட்பம், செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச அங்கீகாரங்களை பெற்று வருகிறது” என்றார். இவ்விழாவில் நடிகர் தனுஷுக்கு யூத் ஐகான் விருதையும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஐகான் விருதையும் அவர் வழங்கினார்.