உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று மமதா பானர்ஜி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோ, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தன்னை காவல்துறையினர் தாக்கியதை அவர் நினைவு கூர்ந்தார். “பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான எனது விசாரணையை நிறுத்துமாறு உங்கள் அரசின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை அதிகாரிகள் என்ன தாக்கினர். அப்போது மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இது வெட்கக்கேடானது. உங்கள் ஆட்சியில் காவலர்கள் கூட குண்டர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்” என்று பிரியங்க் கனூங்கோ டுவீட் செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை பிரபல மாஃபியா தலைவனும் சமாஜ்வாதி கட்சியின் அரசியல்வாதியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் பிரயாக்ராஜில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களை போல வந்த மூவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்த அம்மா நில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தனது டுவிட்டர் பதிவில், “”உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொடூரமான அராஜகம் மற்றும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். குற்றவாளிகள் இப்போது சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது வெட்கக்கேடானது, காவல்துறை மற்றும் ஊடகங்களின் இருப்பைக் கண்டு துவண்டுவிடாது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எங்களது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இடமில்லை” என கூறியிருந்தார். இதனையடுத்தே மேற்கு வங்கத்தின் உண்மை நிலையை பிரியங்க் கனூங்கோ சுட்டிக் காட்டியுள்ளார்.