பாரதத்தின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப் தலைமையகத்தில் நடைபெற்ற நிதிக் குழு கூட்டத்தில் பாரதத்தின் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அதில் அவர், பாரதத்தின் வளர்ச்சி, அதற்கான காரணங்கள், சர்வதேச அளவில் நிலவும் சவால்கள், சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். இத்தகைய கடினமான சூழலிலும் பாரதத்தின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், “2023ம் ஆண்டில் பாரதம் வேகமாக வளரும் பொருளாதார நாடாக திகழும் என்று சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கணித்து உள்ளன. பாரதத்தின் இந்தப் பொருளாதார வளர்ச்சி தொடரும். கடந்த நிதியாண்டில் அதன் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள பி.எல்.ஐ, கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார கொள்கைகள் தேசத்தின் பொருளாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகின்றன. பாரதத்தில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கட்டமைப்பும் இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார். கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் பல நாடுகளுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன், பாரதம் அதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஜி20 நாடுகள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.