ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை சாத்தியமா?

சென்னை உயர் நீதிமன்றம், சென்னையில் உள்ள கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்கவருவோரின் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி தாமாக முன்வந்து ஒரு பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு விசாரணையின்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மேற்குறிப்பிட்டமீன் கடைகள் நடத்தும் மீனவர்களுக்காக ரூ. 9 கோடியே 97 லட்சம் செலவில் மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. மீன்சந்தை அமைக்கும் பணி இன்னும் 6 மாதங்களில் முடிந்துவிடும். அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தற்காலிகமாக போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கைகளுள் எடுக்கப்படுகிறது. லூப் சாலையில் உள்ள உரிமம் இல்லாத உணவகங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதையடுத்து பேசிய நீதிபதிகள், “சாலை ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், சாலையில் ஆக்கிரமிப்புக்கு தான் அனுமதியளிக்கப்படுகிறதே தவிர, போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்ற நிலையே தற்போது நிலவுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பல சிறு உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு எல்லாம் யார் உரிமம் வழங்கியது? இந்த சாலையில் மீன் கழிவுகள் கட்டப்படுகின்றன. பொதுசாலைகள் ஆக்கிரமிப்புகளை பொறுத்துக்கொள்ள முடியாது. இதில் சமரசம் கிடையாது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை அரசு எப்படி எட்ட முடியும்? லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, வரும் 18ம் தேதிக்குள் மாநகராட்சி அதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அங்கு எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் மீனவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதேநேரம், சாலை ஆக்கிரமிப்பயும் ஏற்க முடியாது” என கூறினர்.