ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரத்தை பெறுவதற்கு, 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 4 மாநிலங்களில் பிராந்திய கட்சி அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் சில விதிகளை நிர்ணயித்துள்ளது. இந்த 3 விதிகளில் குறைந்தபட்சம் ஒரு விதியை பூர்த்தி செய்யும் கட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், டெல்லி, பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 6 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளையும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 13 சதவீத வாக்குகளியும் ஆம் ஆத்மி கட்சி பெற்றது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரம் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அக்கட்சிய்ன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆம் ஆத்மி விவகாரத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதே சமயம், மேற்குறிப்பிட்ட விதிகளை பூர்த்தி செய்யாத திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களது தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன. புதுச்சேரியில் பா.ம.கவுக்கு பிராந்திய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, தற்போது பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தேசிய கட்சிகளாக உள்ளன.