கல்லூரிகள், கோயில்களின் அருகில் மதுபான கடைகளை அனுமதித்து உள்ளதை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் புதுச்சேரி மாநிலத் தலைவர் அ.வா. சனில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், “புதுச்சேரியின் புனிதத் தன்மையை அரசு பாதுகாக்க வேண்டும், ஆன்மீக பூமியான புதுச்சேரியில், அரசின் மதுபான கொள்கையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குடிசை தொழில்களுக்கு அனுமதி அளிப்பதை போல ரெஸ்ட்டோபர்களுக்கும், பப்பு கலாச்சாரத்திற்கும் அரசு தங்கு தடை என்று அனுமதி அளித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. புதுச்சேரியில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது மேலும் போதை ஆசாமிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், கடந்த சில தினங்களுக்கு முன் ரோட்டில் சென்ற இளைஞரை போதையில் வந்தவர்கள் தாக்கியதால் அப்பாவி ஒருவர் உயிரிழந்தார் என்பதை படிப்பினையாக கொண்டு மேலும் இதுபோன்று நடக்காதவாறு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள மதுபானகடைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட நல்லிரவு வரை செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசியல் பின்புலம் உள்ளவர்களின் மதுபான கடைகள் அதிகாலை வரை செயல்படுகின்றன. இதன் விளைவாக சாதாரண பொதுமக்கள் இரவில் நடப்பதற்கு அச்சப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி பள்ளி கல்லூரிகள், கோவில்களின் அருகில் மதுபான கடைகளை அனுமதித்துள்ளதை அரசு திரும்பப் பெற வேண்டும். போதை மாநிலமாக புதுச்சேரி மாறி வருவதை தடுக்க ஆளுநர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.