விரக்தியில் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைமையின் செயல்பாடுகள், எதேச்சதிகாரம், ராகுலின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகள், யாரையும் மதிக்காத மனப்பாங்கு போன்ற பல காரணங்களால் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த சில வருடங்களாக பல மூத்தத் தலைவர்கள், இளைய துடிப்பான தலைவர்கள் என பலர் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் மூழ்கிவரும் கப்பலாக காங்கிரஸ் மாறியுள்ளது. சமீப வருடங்களாக அக்கட்சி தொடர்ந்து சந்தித்து வரும் தேர்தல் தோல்விகளே இதற்கு சிறந்த உதாரணம். இதனால் ராகுல் கடும் விரக்தியில் உள்ளார். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய 5 முக்கியத் தலைவர்களின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராகுல். அதாவது, அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அனில் அந்தோணி ஆகியோரை இணைத்து குறிப்பிட்டுள்ளார். அதனுடன், “உண்மையை அவர்கள் மறைத்து விட்டனர். அதனாலேயே நாள்தோறும் தவறாக வழிநடத்தி செல்கின்றனர். அதானி நிறுவனத்தில் ரூ. 20 ஆயிரம் கோடி பினாமி பணம் வைத்திருப்பவர்கள் யார்? என்ற அதே கேள்வியே தொடர்ந்து நீடிக்கிறது” என பதிவிட்டுள்ளார். ராகுலின் இந்த டுவிட்டர் பகிர்வுக்கு, அக்கட்சியில் இருந்து வெளியேறிய அந்த தலைவர்கள் தரப்பில் இருந்து தக்க பதிலடி தரப்பட்டு உள்ளது.

இவர்களில் குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கினார். மற்ற நான்கு தலைவர்களும் பா.ஜ.க.வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதில் அளித்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அளித்துள்ள வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “போபர்ஸ் ஊழல் மற்றும் நேசனல் ஹெரால்டு ஊழல்களில் தொடர்புடைய குற்றங்களை எங்கே மறைத்தீர்கள்? என ஒருபோதும் நாங்கள் கேட்காதது எங்களது நாகரீகம். பாரதத்தின் நீதியின் கரங்களில் இருந்து பலமுறை ஒட்டாவியோ குவாத்ரோச்சியை தப்புவிக்க நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? என்றும் நாங்கள் கேட்கவில்லை. எனினும், சட்டப்படி நீதிமன்றத்தில் இதனை நாம் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் காங்கிரசில் இருந்து விலகிய ஏ.கே அந்தோணியின் மகனான அனில் அந்தோணி அளித்துள்ள பதிலில், “காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் மற்றும் முன்னாள் கட்சி தலைவர் ஒருவர், தேசிய தலைவர் போல் அல்லாமல், சமூக ஊடக பிரிவில் பணியாற்றுபவர் போன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது. தேச கட்டமைப்பு பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்த உயர்ந்த தலைவர்களுடன் என்னையும் இணைத்து காட்டப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் பாரதம் மற்றும் நாட்டு மக்களுக்கு பணியாற்ற விரும்பி காங்கிரசை விட்டு வெளியேறியுள்ளனர். குடும்பத்திற்காக அல்ல” என தெரிவித்துள்ளார்.