சொத்துவரி மீண்டும் உயர்வு?

தி.மு.க தலைமையிலான அரசு தமிழகத்தில் பதவியேற்றது முதல், சொத்து வரி உட்பட அனைத்து வரிகளும் மின்சாரம் உட்பட அனைத்து கட்டணங்களும் கட்டுமானப் பொருட்கள் உட்பட அனைத்து விலைகளும் விண்ணளாவ உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், விடியல் வரும் என நம்பி ஏமாந்து தி.மு.கவுக்கு வாக்களித்த மக்கள், தற்போது நிரந்தர இருட்டில் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சொத்து வரி 25, 50, 75 மற்றும் 100 என்ற சதவீதத்தில் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது. காலிமனை வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என மக்களுக்கு அப்போதே அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் விழி பிதுங்கி நின்றனர். சொன்னதை செய்வோம் என மார்தட்டிக்கொள்ளும் தி.மு.க அரசு, தான் சொன்ன எதை செய்ததோ இல்லையோ, அறிவித்தபடியே தற்போது சொத்து வரியை மட்டும் 6 சதவீதம் உயர்த்தவுள்ளது. இதனால் இந்த ஏப்ரல் முதல் செலுத்தப்படும் சொத்துவரி மற்றும் காலிமனை வரிகள் 6 சதவீதம் உயர்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். எழுந்துள்ளது. சென்ற ஆண்டு சொத்து வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டது, உடனேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டும் அதை தொடர்ந்து உயர்த்துவதால், வீட்டின் உரிமையாளர்களை மட்டுமின்றி வாடகை வீட்டுக்காரர்கள், சிறிய கடைகாரர்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். ஆனால், இதனை விடியல் அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.