பா.ஜ.கவில் இணைந்த ராஜாஜியின் கொள்ளுப்பேரன்

பாரதத்தின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், மாநில முதல்வர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்து அவற்றுக்கு புகழ் சேர்த்தவர் மூதறிஞர் ராஜாஜி. அவரது கொள்ளுப்பேரன் சி.ஆர். கேசவன், கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தின் துணை தலைவர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர், தேசிய செய்தி தொடர்பாளர் என பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர் சி.ஆர் கேசவன். காங்கிரசில் இருந்து விலகிய அவர், பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் மிக பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வில் என்னை சேர்த்ததற்காக, அதுவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இருக்கும்போது, உங்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என கூறினார். இதனை வரவேற்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ராஜாஜி அவர்களின் கொள்ளுப் பேரன் சி.ஆர், கேசவன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு இன்று தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். தமிழக பா.ஜ.க சார்பாக அவரை மனமார வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரான ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, காங்கிரசை சேர்ந்த ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். கங்கிரசின் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில், தற்போது இளம் தலைமுறையினரும் அதில் இருந்து விலகி வருவது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பா.ஜ.க, பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்தபோது, ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர், திரௌபதி முர்மு ஒரு தீய சித்தாந்தத்தில் இருந்து வருபவர் என்றும், இவரை போன்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள், எந்த நாட்டின் அதிபராகவும் வரக்கூடாது என்று கூறியதாகவும் அதனால் தான் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திராவில் பங்கேற்கவில்லை எனவும் கேசவன் அப்போது கூறியிருந்தார். மேலும், பிரதமர் மோடி, அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா வீரர்கள் பெயர்களை சூட்டி கௌரவித்தார். ஆனால் காங்கிரசோ ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கு ஆதாரம் கேட்கிறது. ராணுவத்தை அவமதிக்கிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. இது போல தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. இனியும் இதில் இருப்பது தவறு என்று முடிவெடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன். காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியதில் கடந்த 20 ஆண்டுகளாகவே நான் எந்தவித மதிப்புமிகு அடையாளத்தையும் உணரவில்லை. எனவே இனியும் என்னால் காங்கிரசுடன் இணைந்து செயல்பட முடியாது என தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.