காங்கிரஸில் உங்களுக்கு முதுகெலும்பு இருக்காது

முன்னாள் காங்கிரஸ் தலைவரும், ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட அவசரச் சட்டத்தைக் கிழித்ததற்காகக் கண்டித்தார். ஆசாத், இந்தியா டுடே பத்திரிகையின் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய ‘ஆசாத்’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாடியபோது, “நீங்கள் காங்கிரஸில் இருந்தால், முதுகெலும்பில்லாதவர்” என்று குறிப்பிட்டார்.

உரையாடலின் போது, “2013ல், நீதிமன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், உடனடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து காப்பாற்ற அவசரச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது அதை ராகுல் காந்தி எதிர்த்தார். அப்போது அவர் அமைச்சரவையில் உறுப்பினராக கூட இல்லை. இது துரதிர்ஷ்டவசமானது. எனினும், அமைச்சரவை அவசரச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும், ராகுலின்  எதிர்ப்புக்கு அடிபணிந்து இருக்கக்கூடாது என்று கூறினார். ராகுல் இதனை செய்ய எந்த ஒரு சட்டப்பூர்வ நிலையிலும் இல்லை. அவர் செய்தது போல் எந்த ஒரு வெளி நபரும் இந்த ஆணையை நிராகரிக்க முடியாது. குடியரசுர்த் தலைவரால் மட்டுமே அவசரச் சட்டத்தை ரத்து செய்ய முடியும், நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆனால், அதற்கு ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவசரச் சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை கூட்டாக முடிவு செய்தது. இப்போது அதை கிழித்தவர் மீதே அந்த சட்டம் பாய்ந்துள்ளது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி, சில சட்டங்களை இயற்றும்போது, அவர்களது எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்து, அவர்கள் ஆட்சியில் இல்லாத காலத்திற்கும் சேர்த்தே அதனை திட்டமிட வேண்டும். துரதிருஷ்டவசமாக, காங்கிரஸ் அதைச் செய்யத் தவறிவிட்டது. இப்போது ராகுல் அதனை எதிர்கொண்டுள்ளார். தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் நான் இல்லாததற்கு ராகுல் காந்தியே முக்கிய காரணம். இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி செய்ததில் ஒரு பங்கையே ராகுல் காந்தி செய்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார்” என குறிப்பிட்டார்.

அப்போது, குலாம் நபிஆசாத், காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது இருந்திருந்தால், ராகுல் காந்திக்கு ஆதரவாக சூரத் நீதிமன்றத்திற்கு வெளியே வரிசையாக நின்றிருப்பார் என்று சர்தேசாய் கேள்வியெழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஆசாத், “ஆம், உண்மைதான். ஏனென்றால் நீங்கள் காங்கிரசில் இருக்கும்போது முதுகெலும்பு இல்லாதவராக இருப்பீர்கள். தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் செய்தது போல் சூரத் நீதிமன்றத்திற்கு வெளியே நான் நின்றிருக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என ஆசாத் குறிப்பிட்டார். குலாம் நபிஆசாத், தனது டுவிட்டர் பதிவில், “தற்போது டுவிட்டரில் அரசியல் நடத்தும் எந்தத் தலைவரையும் விட தாம் 2,000 சதவீதம் அதிக காங்கிரஸ்காரர்” என்று கூறியதுடன் “இருப்பினும், கட்சிக்கு அவரைப் போன்ற தலைவர்கள் தேவையில்லை, ஆனால் டுவிட்டர் அரசியல் செய்யக்கூடியவர்கள் மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவால் காங்கிரஸுக்கு 500 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லும் துணிச்சல் உள்ளவர்களை தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்றும் கிண்டல் செய்தார்.

எந்தக் கட்சித் தலைவருக்கும் மற்ற கட்சி உறுப்பினர்களின் ஆதரவு சாட்டை பிறப்பிக்கப்பட்டதால் இருக்கக் கூடாது என்றார் ஆசாத். அப்போது அவர், “முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது நான்தான். நீங்கள் ஜெயின் கமிஷனை எதிர்கொள்ள வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன், ஆனால் நான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தாலும், நான் உங்களுக்கு ஆதரவளிக்கப் போகிறேன், நான் செய்தேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூட, அப்போதைய எம்.பி.க்களை தனக்கு ஆதரவளிக்குமாறு கட்டாயப்படுத்தி ஒரு சவுக்கையும் பிறப்பிக்கவில்லை என்றும், அது இயல்பாகவே வந்தது என்றும் அவர் கூறினார்.