ஹரிபத்மன் சிறந்த ஆசிரியர்

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஹரிபத்மனை ஹைதராபாத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், ஏப்ரல் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, நடிகை அபிராமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே நான் குரல் கொடுப்பேன். இந்த விவகாரம் குறித்து முதலில் நான் பேசியபோது, விளம்பரத்துக்காக பேசுவதாக கூறினார்கள். இதன்மூலம் விளம்பரம் கிடைத்து எனக்கு ஒன்று கிடைக்கப்போவது இல்லை. வேண்டுமென்றால், இதுபோன்ற விவகாரத்தில் தலையிடாமல், நான் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால் கலாஷேத்ரா குறித்து தொடர்ச்சியாக அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்தது வெகுவாக என்னை பாதித்தது.

அந்தக் கல்லூரிக்காக குரல் கொடுக்க வேண்டியது, அங்கு படித்த ஒவ்வொரு மாணவியின் கடமை என்று உணர்ந்ததால், நான் கலாஷேத்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். அதற்காகத்தான் நான் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தேன். ஒரு கல்லூரியின் மீது குற்றம்சாட்டப்பட்டால், அங்கு படிக்கும் மாணவர்களை நேரடியாக பேசவிட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் மாணவிகள் தவறாக தூண்டிவிடப்படுகிறார்கள்.  பலிகடாவாக ஆக்கப்படுகிறனர். கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் நான் வேதனை அடைந்துள்ளேன். நான் படிக்கின்ற காலத்திலேயே ஒரு ஆசிரியை, ஹரிபத்மனுக்கு எதிராக பேசும்படி என்னை வற்புறுத்தினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்தக் கல்லூரியில், நான் 2010 முதல் 2015 வரை படித்தேன். 10 ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுவதால்தான், நான் இந்த விவகாரம் குறித்து பேச வந்தேன். கடந்த 2013 காலக்கட்டத்தில் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீது, போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கினார்கள். தற்போது ஆசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளனர். இத்தனை நாட்களாக எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருந்துவிட்டு, இப்போது மாணவிகளை தூண்டிவிட்டு இந்த விவகாரத்தை பெரிதாக்கிவிட்டனர். அந்தக் கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை. எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் நான் நேரடியாக அமர்ந்து பேசி என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறேன். ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்” என கூறினார்.

பொய் புகார்: இந்நிலையில், பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி திவ்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் தான் பணியாற்றுகிறேன். எனது கணவர் நேர்மையானர். எந்த தவறும் செய்யாதவர். காழ்ப்புணர்ச்சி கொண்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரில் என் கணவர் மீது முன்னாள் மாணவி ஒருவர் பொய் புகார் கொடுத்துள்ளார். அதில், சிறிதும் உண்மை இல்லை. புகார் கொடுத்த மாணவி, எங்களது மகள் பிறந்தநாள் நிகழ்வில்கூட கலந்து கொண்டுள்ளார். எனவே, நேர்மையான பெண் காவல் அதிகாரி ஒருவரை வைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். எனது கணவர் மீதுள்ள குற்றச்சாட்டை அவர் சட்ட ரீதியில் சந்திப்பார். பொய் புகார் கொடுத்தவர்கள் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.