காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் ஃபைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பா.ஜ.க தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது பதவி காலத்தில் ரூ. 4.82 லட்சம் கோடி ஊழல் செய்து உள்ளது என்று அந்த வீடியோவில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் ஃபைல்ஸ் வீடியோவின் 2வது பகுதி வெளியானது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் என்றால் ஊழல் என்ற தலைப்பில் 3வது வீடியோவை பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. 3 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த வீடியோவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்காலத்தில் 2012ல் நடந்த நிலக்கரி ஊழல் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த நிலக்கரி ஊழல் காரணமாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவப்பெயர் ஏற்பட்டது. இந்த ஊழலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக இருந்தது துணையாக செயல்பட்டது என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், காமன் வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக 4வது வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் பா.ஜ.க தெரிவித்துள்ளது.