இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் பேச்சு சமீபகாலமாக பிரிவினைவாதத்தை விதைக்கும் விதமாக உள்ளது. புலால் உண்ணாமையை போதித்த மகாவீரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது பற்றி பேசிய சீமான், ‘தமிழர்கள் இறைச்சி உண்ண தடை விதிப்பது ஜனநாயக துரோகம்’ என்று பேசியுள்ளார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரதம் என்ற கருத்தை உடைக்கும் விதமாக உள்ளது. மொழிகள் வேறுபட்டாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உன்னத சிந்தனையை உடைக்கப் பார்க்கிறார் சீமான். வள்ளலார் பிறந்த தினத்திற்கும் திருவள்ளுவர் பிறந்ததினத்திற்கும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழர்களாகிய இவர்களின் பிறந்தநாளில் இறைச்சிக் கடைகளை திறக்க சொல்கிறாரா? சீமான். ரம்ஜான், முஸ்லிம்களின் பண்டிகைதான் அதற்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கலாமே? ஹிந்துக்களுக்கு எதற்கு என்பதற்கு இவர் பதில் சொல்வாரா? காந்தி ஜெயந்தி விடுமுறை அனைவருக்கும் எதற்கு என்பதை இவர் தெளிவுபடுத்துவாரா? செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியார் என்று பாடிய பாரதி பிறந்த தமிழகத்தில் தொடர்ந்து பிரிவினைவாத கருத்துகளை பரப்பி வடக்கன், தெற்கன் என்றெல்லாம் பேசி சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கும் சீமானின் பேச்சை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இனியாவது சீமானின் சில்லறைத்தனமான பேச்சுகளை நம்பி இளைஞர்கள் அவர் பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.