சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு காட்பாடி, விழுப்புரம் வழியாக வட்ட ரயி்ல்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி) விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல். முருகனிடம், ஏ.பி.ஜி.பி அமைப்பின் தென்பாரத அமைப்புச் செயலர் எம்.என். சுந்தர், வல்லுநர் குழு உறுப்பினர் ஆடிட்டர் சம்பத் ஆகியோர் மனு அளித்தனர். அதில், ‘சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு தற்போது வரை நேரடி ரயில் போக்குவரத்து கிடையாது. எனவே, பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும் ரமண மகரிஷியின் தவத்தலமான திருவண்ணாமலைக்கு வட்ட ரயில் பாதையில் இரு ரயில்கள் இயக்கவேண்டும். சென்னை கடற்கரையிலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாகவும், சென்னை எழும்பூரிலிருந்து காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாகவும் வட்ட ரயில் சேவை தொடங்க ரயில்வே ஆணையம் முன்வர வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக சுற்றுலா மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை இதனை பரிந்துரை செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.