காங்கிரஸ் ஃபைல்ஸ் முதல் பாகம்

பா.ஜ.கவின் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் ஃபைல்ஸ் முதல் பாகம்’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. மேலும் இந்த வீடியோவில், “காங்கிரஸின் மறுபெயர் ஊழல். அந்த கட்சியின் 70 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 4.82 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இது மக்களின் பணம். இந்த பணத்தை காங்கிரஸ் சுருட்டிவிட்டது. காங்கிரஸ் ஊழல்களில் சுருட்டிய பணத்தின் மூலம் 24 ஐஎன்.எஸ் விக்ராந்த் போர்க் கப்பல்கள், 300 ரஃபேல் போர் விமானங்களை உருவாக்க அல்லது வாங்க முடியும். 1,000 மங்கள்யான் திட்டங்களை செயல்படுத்த முடியும். காங்கிரஸின் ஊழல்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இந்த 10 ஆண்டுகள் நாட்டின் தொலைந்துபோன காலமாக கருதப்படுகிறது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஊழல்கள் பெருகின. ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல், ரூ. 1.76 லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல், ரூ. 10,000 கோடி நூறு நாள் வேலை திட்டஊழல், ரூ. 70,000 கோடி காமன்வெல்த் ஊழல், ரூ. 362 கோடி ஹெலிகாப்டர் ஊழல், ரூ. 12 கோடி ரயில்வே வாரிய ஊழல் என மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஊழலில் மூழ்கியிருந்தது. அப்போது அனைத்து நாளிதழ்களிலும் ஊழல் செய்திகள் நிறைந்திருந்தன. இதன் காரணமாக ஒவ்வொரு பாரதக் குடிமகனும் வெட்கத்தில் தலை குனிந்தனர். இந்த வீடியோ காங்கிரஸ் ஊழல்களின் ஒரு வெள்ளோட்டம் மட்டுமே. படம் இன்னும் முடியவில்லை” என கூறப்பட்டுள்ளது.