சென்னையில் ஓலா, ஊபர் ஆட்டோ, கால்டாக்சிகள் வரிசையில் சமீப காலமாக, பைக் டாக்சியும் பிரபலமாகி வருகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே அவர்கள் பைக் டாக்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். முன்னர் இதேபோலவே, ஷேர் ஆட்டோவுக்கு எதிராகவும் தனி ஆட்டோ ஓட்டுனர்கள் குரல் கொடுத்து வந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களை தாக்குவதாக பைக் டாக்சி ஓட்டுனர்கள் புகார் அளித்துள்ளனர். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பைக் டாக்சி ஓட்டுனர்கள் திரண்டு வந்து இது தொடர்பாக மனு அளித்தனர். அதில், ‘நாங்கள் பயணியை அழைக்க செல்லும்போது கோயம்பேடு, சென்ட்ரல், ஆலந்தூர், விமான நிலையம், எழும்பூர், மாதவரம் ஆகிய இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர், எங்களுடைய அலைபேசிகளை பறிப்பது, ஆபாசமாக திட்டுவது, கல் எறிவது, அடிப்பது, வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் எங்களுக்கும், வாகனத்துக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் அவர்கள், எங்கள் வாகனங்களில் பயணிக்கும் பயணியையும் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பெண் வாடிக்கையாளர்களை மிகவும் ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆணையர், இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.