எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குழுவினருக்கு பாராட்டு

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். தமிழக வனப்பகுதியில் தாயை இழந்த யானைக்குட்டிக்கும் அதை வளர்த்தவர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்குவதாக இந்தப் படம் அமைந்திருந்தது. குனீத் மோங்கா தயாரித்த இந்த குறும்படம், ஆஸ்கர் விருதை வென்றது. பாரதத்தில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இதுவே முதல் முறை. இந்நிலையில், கான்சால்வ்ஸ் மற்றும் மோங்கா உள்ளிட்ட இந்த படக்குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் சர்வதேச அளவில் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. அந்தப் படத்தில் பணியாற்றிய திறமையான குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு இன்றுஎனக்குக் கிடைத்தது. பாரதத்துக்கு அவர்கள் பெருமை தேடித் தந்துள்ளார்கள்” என பதிவிட்டுள்ளார். இதனிடையே, வரும் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். அன்று நடக்கும் விழாவில் அவர் சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். அதற்கு அடுத்த நாள் 9ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50வது ஆண்டு பொன்விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  இதனையொட்டி பாரதத்தில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட உள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவ்வகையில், பிரதமர் மோடி 9ம் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்ம் அங்கிருந்து அதன் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கும், வயநாட்டில் உள்ள புலிகள் காப்பகத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும், முதுமலைக்கு வரும் பிரதமர், ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பான உறுதியான தகவல்கள் வெய்ன்னும் உறுதி செய்யப்படவில்லை.