உஜ்வாலா பயனாளிகளுக்கு மானியம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவை குழு, பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு 14.2 கிலோ எரிவாயு உருளைக்கு ரூ. 200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2021 மார்ச் 1ம் தேதி நிலவரப்படி 9.59 கோடி பிரதமரின் உஜ்வாலா பயனாளிகள் நாட்டில் உள்ளனர். இந்த மானியத்திற்காக நிகழும் நிதியாண்டில் 6,100 கோடி ரூபாயும், அடுத்த நிதியாண்டில் 7,680 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. பல்வேறு புவிசார் அரசியல் காரணமாக சமையல் எரிவாயுவின் சர்வதேச விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த மானிய அறிவிப்பு உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது உஜ்வாலா பயனாளிகள் சமையல் எரிவாயு உருளைகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை ஆகும். மேலும், உஜ்வாலா பயனாளிகள் நீடித்த சமையல் எரிவாயுவை ஏற்றுக் கொள்ளும் பாங்கு மற்றும் அவற்றின் தொடர் பயன்பாட்டை உறுதி செய்வதே முக்கியம் இதன்மூலம் அவர்கள் தூய்மையான சமையல் எரிபொருளுக்கு மாற முடியும். 2019ல் 3.01 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளைப் பயன்பாடு 2021ல் 20 சதவீதம் அதிகரித்து 3.68 ஆக உள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த மானியத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவர். கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்கும் முயற்சியாக, இலவச சமையல் எரிவாயு உருளைகளை ஏழைப் பெண்களுக்கு வழங்கும் நோக்கில், கடந்த 2016 மே மாதத்தில் உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.