கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அறிக்கை

கலாக்ஷேத்ரா அறக்கட்டளைக்கு எதிரான இணையவழி பிரச்சாரம் குறித்து அதன் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சில ஆசிரியர்களைத் தாக்கியும், கடந்த சில மாதங்களாக சமூக ஊடகம் வாயிலாக அநாகரிகமான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நிறுவனத்தில் புகார்கள் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இயக்குநர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஓர் அனுபவம் வாய்ந்த பெண் வழக்கறிஞர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சமூக ஊடகங்களில் பரவலாக குற்றம் சாட்டப்பட்டு, இணையவழி இதழில் மீண்டும் வெளியாகியிருந்த விஷயம் குறித்து தானாக இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டது. சுமார் இரண்டரை மாத காலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் கண்டறியப்படாததோடு, இவை அர்த்தமற்றது என்று தெரியவந்தது. விசாரணை நடத்தப்பட்ட காலத்தில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின் படி எந்த ஒரு புகாரும் பெறப்படவில்லை. மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, 1993ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது. ருக்மணி தேவி அருண்டேலின் தொலைநோக்குப் பார்வையால் 1936ம் ஆண்டு கல்வி நிறுவனமாக தொடங்கப்பட்டு, ‘அச்சம் இல்லாமல் கல்வி, ஆபாசம் இல்லாமல் கலை மற்றும் துன்புறுத்தல் இல்லாமல் அழகு’ என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் பாரத கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் நடனத்தை ஊக்குவிப்பது மற்றும் பாதுகாப்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையேயான உறவு புனிதமானது. அதிலும், அறக்கட்டளை தங்களது குழந்தைகளை பாதுகாக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் பெற்றோர் மாணவர்களை எங்கள் வசம் ஒப்படைக்கும் போது அந்த புனிதத்தன்மை மேலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு கலைஞர், மாணவர் மற்றும் ஊழியருக்கும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான இடத்தை வழங்குவதில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தொடர்ந்து உறுதியோடு உள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்திடம் மார்ச் 24, 2023 அன்று அறக்கட்டளை விளக்கம் அளித்ததோடு குறிப்பிட்ட இதழில் தெரிவிக்கப்பட்டிருந்த விஷயம் தொடர்பாக நிறுவனம் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தது. இந்த நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கை எழுப்பியதோடு, இதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் கூடுதல் விசாரணைக்கு ஆணையம் உத்தரவிட்டால் அதையும் வரவேற்பதாக கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்தது.