அன்பு ஜோதி ஆசிரம முறைகேடுகள்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த கிறிஸ்தவ ஆசிரமமான அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆட்கள் காணாமல் போதல், அங்கு தங்கியிருக்கும் மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் உள்லிட்டோரை அடித்து துன்புறுத்தியது, பாலியல் அத்துமீறல்கள், கட்டாய மதமாற்றம், போதைமருந்து பயன்பாடு, உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் 10ம் தேதி காவல்துறையினர் விசாரணைநடத்தினர். ஆசிரமத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோரில் 20 பேர் காணாமல் போயிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்கட்சிகளின் கடும் அழுத்தத்தால் இவ்வழக்கு சி.பி சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆசிரம முறைகேடுகள் சம்பந்தமாக, தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம், மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தியுள்ளன. அவ்வகையில், கடந்த 21ம் தேதி முதல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பலிராம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அன்பு ஜோதிஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பெண்கள் உட்பட 20 பேரிடம் விசாரணை நடத்தினர். இவ்வழக்கை புலன் விசாரணை செய்து வரும் விழுப்புரம் சி.பி சி.ஐ.டி கூடுதல் கண்காணிப்பாளரிடம் இவ்வழக்கு சம்பந்தமாக கேட்டறிந்தனர். பின்னர், 22ம் தேதி அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை நிறைவு அடைந்ததை முன்னிட்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.