கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ”எல்லா திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப் பெயரை வைத்துள்ளனர்?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து, குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, ராகுலுக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், ராகுல் காந்தி, ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 17ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா நாளை (23ம் தேதி) தெரிவிக்க உள்ளார். அன்றைய தினம் ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவருடைய வழக்கறிஞர் கிரித் பன்வாலா தெரிவித்துள்ளார்.