எஸ்.சி., பி.சி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

போட்டித் தேர்வுகளை எழுத பட்டியல் சமூக  மற்றம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச பயிற்சி அளித்து வரும் நிலையில், இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை  அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ”நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் இலவசப் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 8,761 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 1,239 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை https://socialjustice.gov.in/schemes/30  என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். சாதியம், பிராந்தியவாதம், மொழித் தீவிரவாதம் ஆகியவை சமூகத் தீமைகளாகும் என்றும்  இவற்றை சமூக இயக்கங்கள், கல்வி, குடிமக்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின மூலமே ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியிருக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கான சட்டங்கள், அமலாக்கப்படுவதோடு, இவற்றை மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அமலாக்க நிதியுதவி அளிக்கப்படுவதாகக் கூறினார். மேலும் மணமக்களில் ஒருவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் கலப்புத் திருமண உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.