ஐஎஸ்கேபி தீவிவராதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 5 இடங்களில் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஐஎஸ்கேபி தீவிரவாதிகள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தங்களது அமைப்பை விரிவுபடுத்துவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்பினருடன் யாருக்காவது தொடர்பு உள்ளதா என அறிய நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதைப் போல் மகாராஷ்டிராவின் புனேவிலுள்ள ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர். புனேவில் தல்ஹா கான் என்பவரது வீட்டிலும், சியோனி பகுதியில் அக்ரம் சோனி என்பவரது வீடுகள், வணிக வளாகங்களிலும் இந்த சோதனை நடந்தது. இவர்கள் இருவருமே ஐஎஸ்கேபி அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நவம்பரில் மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஷோயிப் கான், அப்துல் அஜிஸ்கான் ஆகியோரது வீடுகள், வணிக வளாகங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக டெல்லியில் உள்ள ஓக்லாவில் வசித்து வந்த காஷ்மீரி தம்பதிகளான ஜஹான்சைப் சமிவானி, அவரது மனைவி ஹினா பஷீர் பபேக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், டெல்லி போலீஸாரின் சிறப்புப் பிரிவால் இந்த வழக்கு முதலில் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் இஸ்லாமிக் ஸ்டேட் கோரோசன் புரொவின்ஸ் (ஐஎஸ்கேபி) என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயககக் கருத்தை முற்றிலும் வெறுக்கும் இளைஞர்களை, மூளைச் சலவை செய்து ஜிஹாத் (புனிதப் போர்) செய்யவும், ஐஎஸ்கேபி அமைப்பில் இணையவும் இவர்கள் முயற்சி செய்து வந்தனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.