80 வயதான வாக்காளர்கள் வீட்டிலிருந்து வாக்களியுங்கள்

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி (வி.எப்.ஹெச்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதியை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. தேதல் பணீயாளர்கள், தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த படிவம் 12டி உடன் அவர்களது இருப்பிடங்களுக்கே செல்வார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்குச் சாவடிக்கு வருமாறு நாங்கள் ஊக்குவித்தாலும், இயலாதவர்கள் இந்த வசதியைப் பெறலாம். ரகசியம் பராமரிக்கப்பட்டு முழு செயல்முறையும் வீடியோ எடுக்கப்படும். வீட்டிலிருந்து வாக்களிக்கும் இயக்கம் நடக்கும் போதெல்லாம், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு, ‘சக்ஷம்’ என்ற அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதில் அவர்கள் உள்நுழைந்து வாக்களிக்கும் வசதியை தேர்வு செய்யலாம். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் மற்றும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் போர்ட்டலான ‘சுவிதா’ என்ற மற்றொரு அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி பெற சுவிதா போர்ட்டலையும் பயன்படுத்தலாம். வாக்காளர்களின் நலனுக்காக உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) என்ற பிரச்சாரத்தையும் ஆணையம் தொடங்கியுள்ளது. ‘குற்றப் பின்னணி கொண்ட ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து போட்டியிடுவதற்கு ஏன் டிக்கெட் கொடுத்தார்கள் என்பதை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வாக்காளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பேசிய அவர், “224 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் 36 இடங்கள் எஸ்.சி, 15 எஸ்.டி, 2.59 பெண் வாக்காளர்கள் உட்பட 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 16,976 நூறு வயதானவர்கள், 4,699 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 9.17 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட 12.15 லட்சம் வாக்காளர்களும், 5.55 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். மாநிலத்தில் நகர்ப்புறங்களில் 24,063 உட்பட 58,272 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் சராசரியாக 883 வாக்காளர்கள் உள்ளனர். 1,320 வாக்குச் சாவடிகள் பெண்களால் நிர்வகிக்கப்படும். 224 இளைஞர்களால் நிர்வகிக்கப்படும். 224 வாக்குச் சாவடிகள் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும். 29,141 வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் இருக்கும், 1,200 பதற்றமான வாக்குச் சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளன” என்றார். சாத்தியமான தேர்தல் தேதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் மே 24ம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். மாநிலத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலுக்கு தயாராகுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.