சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘கேலோ இந்தியா தஸ் கா தம்’ என்ற 10 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் பிரமாண்ட நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், டெல்லியின் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டி பாரதத்தில் உள்ள 50 நகரங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தொடரை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “நாடு முழுவதும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக ‘தஸ் கா தம்’ முன்முயற்சியானது, பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதை ஊக்குவிக்கும். மார்ச் 10 முதல் 31ம் தேதி வரையில் 10 வகையான விளையாட்டுகளில் பாரதத்தின் 26 மாநிலங்களில் சுமார் 50 நகரங்களில் நடைபெறும். இந்த விளையாட்டுப் போட்டியில் 15,000 தடகள வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிக்காக ரூ. 1 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.