கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாள் பயணமாக கடந்த 8ம் தேதி பாரதம் வந்தார். குஜராத் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடல், ஹோலி பண்டிகையில் பங்கு பெறுவது, அகமதாபாத்தில் நடைபெற்ற பாரதம் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து பார்வையிடுவது வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வர்த்தகம், பாதுகாப்பு, சூரிய மின் சக்தி, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவில் அண்மைகாலமாக ஹிந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் சுமார் 7.21 லட்சம் பாரத மக்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் 43 ஹிந்து கோயில்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “ஆஸ்திரேலியாவில் பாரத வம்சாவளியினர் அமைதியாக வாழ்கின்றனர். எங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து கோயில்கள், பாரதத்தினர், பாரத வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.