தனிநபர் வருமானம் இரட்டிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாரதத்தின் தனிநபர் வருமானம் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ) தெரிவித்துள்ளது. என்.எஸ்.ஓ அமைப்பின் தரவுகள் படி, பாரத மக்களின் தனிநபர் வருடாந்திர வருமானம், நிகழும் நிதியாண்டில் 1,72,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2014ம் ஆண்டு 86,647 ரூபாயாக இருந்தது. இது சுமார் 99 சதவீத உயர்வாகும். கொரோனா காலத்தில் பாரத மக்களின் தனிநபர் வருமானம், ரியல் மற்றும் நாமினல் பிரிவில் குறைந்துள்ளதாக என்.எஸ்.ஓ தரவுகள் காட்டுகின்றன. ஆனால் 2021 முதல் அதன் அளவு மீண்டும் உயர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் (NIPFP) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பினாகி சக்ரவர்த்தி, “உலக வளர்ச்சி காட்டி (world development indicator) தரவுகளின்படி, 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் பாரதத்தின் தனிநபர் வருமானத்தின் சராசரி வளர்ச்சி ஆண்டுக்கு 5.6 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பதிவான வளர்ச்சி மிகவும் பெரியது, முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய அரசின் முயற்சிகளால் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், சமூக இயக்கம் தொடர்பான துறைகளில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள் மூலம் இந்த வளர்ச்சி பாதிவாகியுள்ளதாக கருதுகிறேன். பாரத மக்களும், பாரதத்தின் பொருளாதாரமும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்தது. இருப்பினும், கொரோனாவுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க பொருளாதார மீட்சியை நாம் கண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.