மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

தமிழகத்தில் பலரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றமும்சட்டத்தை ரத்து செய்தது. பின்னர், அமைந்த தி.மு.க அரசு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்தது. அக்குழு, புதிய சட்டம் இயற்ற பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு, இந்த மசோதா கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்து சட்டம் அமலானது. பின்னர், அக்டோபரில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், சட்ட மசோதா சரியாக இல்லாத காரணத்தால், அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. எனினும், இதனால் திருப்தி அடையாத ஆளுநர், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசின் கீழ் வரும் இந்த விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம்? என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ள ஆளுநர், மசோதாவில் போதிய தகவல்கள், தரவுகளை சேர்த்தும், சில திருத்தங்களை செய்தும் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.