சி.பி.எம்மை கை கழுவும் தோழர்கள்

கொச்சி. ஆலப்புழா மாவட்டம் செங்கனூர், செரியநாடு ஆகிய இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 கிளைக் குழுச் செயலாளர்கள் உட்பட 38 கட்சி உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பான, தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் ஆளும் கட்சியான சி.பி.எம் கட்சியின் தொடர்பு மற்றும் சி.பி.எம்’மின் செரியநாடு தெற்கு லோக்கல் கமிட்டி செயலாளரும், ஏரியா கமிட்டி உறுப்பினருமான ஷீத் முகமதுவின் எஸ்.டி.பி.ஐ தொடர்புகள் குறித்த பிரச்சனையை அடுத்து அவர்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், சி.பி.எம் தலைவர் ஷீத் முகமது வசிக்கும் செரியநாடு பஞ்சாயத்தின் 8வது வார்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணங்கள், அப்பகுதியில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ தலைவர் ஆஷிக் மற்றும் அவரது சகோதரர் ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து ஷீத் முகமது உணவகத்தை நடத்தி வரும் தகவல்கள் உள்ளிட்டவை குறித்து கூறப்பட்டுள்ளன். மேலும் “ஷீத் முகமது, பகலில் சி.பி.எம் கட்சிக்காரராகவும் இரவில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவராகவும் செயல்படுகிறார். சி.பி.எம்மில் உள்ள ஹிந்து தோழர்களை நெற்றியில் சந்தன திலகம் அணிந்ததற்காக ஷீத் முகமது திட்டினார். கேரளாவில் இது ஒரு ஹிந்து நடைமுறை. ஆனால், கொல்லம்கடவில் கட்சிக் கொடியை ஏற்றியபோது ஷீத் முகமதுவில் தந்தை முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். இது குறித்து ஷீத் முகமதுவாய் திறக்கவில்லை. ஷீத் அடிப்படைவாதிகளுடன் நெருக்கமாகப் பழகுகிறார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, “போய் பா.ஜ.கவில் சேரு” என்று கூச்சலிடுகிறார். விமர்சிப்பவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இது குறித்து மேலிடத்தில் கோரிக்கை விடுத்தும், எதுவும் நடக்கவில்லை” என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பி.எப்.ஐ பயங்கரவாதிகளால் ஏ.பி.வி.பி தலைவர் விஷால் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஷிக் என்பது குறிப்பிடத்தக்கது. மத அடிப்படைவாத அமைப்புகளுடன் சி.பி.எம் தொடர்பை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் சங்கத்தால் ஈர்க்கப்பட்ட அமைப்புகள் பல காலமாக சுட்டிக்காட்டி வருகின்றன. கேரளாவின் மிகவும் பிரபலமான அரசியல் விமர்சகர்களில் ஒருவர், சி.பி.ஐ உறுப்பினர் ஒருவரும் கூட, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், பல முஸ்லிம் சி.பி.எம் ஆட்கள் இரவில் அடிப்படைவாதிகள் தான். இது இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. சி.பிஎ.ம் அதன் செயல் திட்டங்களுக்கு நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பெறுகிறது. அடிப்படைவாதிகள் முக்கிய அரசியல் கட்சி உறுப்பினர்கள் என்ற பிம்பத்தைப் பெறுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.  இப்போது இதனை சி.பி.எம் தொண்டர்களே இதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த தேர்தலின் போது, சி.பி.எம் எஸ்.டி.பி.ஐ தொடர்புகளை சுட்டிக்காட்டி, தியாகிகள் நினைவிடங்களில் கூட, அக்கட்சித் தலைவர்கள் சுவரொட்டிகளை ஒட்டினர் என்பது நினைவு கூரத்தக்கது.